width:600px height:413px செய்திகள்

மக்காச்சோளத்தில் படைப்புழுத் மாவட்ட கண்காணிப்பு குழு ஆய்வு மற்றும் ஆலோசனை




புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரில் படைப்புழுத் தாக்குதல் குறித்து மாவட்ட கண்காணிப்பு குழு அரிமளம் வட்டாரத்தில் கள ஆய்வு செய்து படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்திட ஆலோசனைகளை வழங்கினார்கள் என வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள மக்காச்சோளப்பயிரில் படைப்புழுவின் தாக்குதல் குறித்து மாவட்ட கண்காணிப்பு குழுவினால் அரிமளம் வட்டாரத்தில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) எஸ்.ராஜசேகரன் மற்றும் பூச்சியியல் உதவி பேராசிரியர் ரமேஷ் ஆகியோர் அடங்கிய குழு அரிமளம் வட்டாரத்தில் கீழைப்பனையூர் கிராமத்தில் வயல் ஆய்வு செய்தனர்.

கள ஆய்வின் போது, மக்காச்சோளப் பயிரில் படைப்புழுவின் தாக்குதலை கட்டுப்படுத்திட பெவேரியா பேசியானா என்ற பூஞ்சான உயிர் மருந்தினைக் கொண்டு விதை நேர்த்தி செய்து விதைத்தல், கடைசி உழவில் ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம்புண்ணாக்கு இட்டு உழவு செய்தல், எக்டருக்கு 20 எண்கள் இனக்கவர்ச்சிப் பொறி வைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழித்தல், விதைக்கும்போது 10 வரிசைக்கு ஒரு வரிசை 2 ½ அடி இடைவெளி விட்டு விதைத்தல், விளக்குப் பொறி வைத்து கண்காணித்தல், வரப்பு பயிராக எள், தட்டைப்பயறு, சூரியகாந்தி, தீவனச்சோளம் மற்றும் சோளம் போன்றவற்றை பயிரிடுதல், தேவைப்படும் போது பரிந்துரை செய்யப்பட்ட பூச்சிக் கொல்லி மருந்துகளான எமாமெக்டின் பென்சோயேட் 10 லிட்டர் தண்ணீரில் 4 கிராம் அல்லது ஸ்பைனிடோரம் 10 லிட்டர் தண்ணீரில் 5 மிலி அல்லது குளோராடிரினிபிரோல் 10 லிட்டர் நீரில் 5 மிலி என்ற அளவில் கைத்தெளிப்பான கொண்டு குருத்தில் படுமாறு தெளிக்க வேண்டும் என ஆலோசனைகள் வழங்கினார்கள்.

மேலும் தற்பொழுது மக்காச்சோளம் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த முறையில் படைப்புழுவை கட்டுப்படுத்திட தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் எக்டருக்கு ரூ.2000/- பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது அரிமளம் வட்டாரத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் மெட்டாரைசியம் அனிசோபிளே என்ற உயிரியல் காரணி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

படைப்புழுத் தாக்குதல் மேலாண்மை முறைகள் குறித்த வயலாய்வின் போது வேளாண்மை உதவி இயக்குநர் க.காளிமுத்து வேளாண்மை அலுவலர் (தரக்கட்டுப்பாடு) முகமது ரபி மற்றும் வேளாண்மை அலுவலர் வீரமணி ஆகியோர் உடனிருந்தனர்.

எனவே மக்காச்சோளம் பயிரிடும் மற்றும் பயிரிட்டுள்ள விவசாயிகள் மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றி படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தி கூடுதல் மகசூல் அடைந்திட தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை அணுகி தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தில் பின்னேற்பு மானியம் பெற்று பயன்பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.




தற்போதைய செய்திகள்