தமிழக அரசினால் 2020-21ம் ஆண்டில் ஊராட்சி ஒன்றியத்திற்கு 400 பயனாளிகள் வீதம் விருதுநகர் மாவட்த்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களில் 4400 பயனாளிகளுக்கு 100 சதவீதம் அரசு மானியத்தில் விலையில்லா அசில் இன நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு 25 எண்ணம் நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக் கோழி குஞ்சுகள் வழங்கப்பட உள்ளது.
இத்திட்டத்தில் ஊரகப்பகுதிகளில் உள்ள ஏழைப்பெண் பயனாளிகள் மட்டும் பயன்பெற தகுதியுடையவர். தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில் பதிவு செய்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். கிராம ஊராட்சியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
முந்தைய ஆண்டுகளில் விலையில்லா கறவை பசுக்கள் மற்றும் வெள்ளாடுகள், செம்மறியாடுகள் மற்றும் கோழி வழங்கும் திட்டத்தில் பயன் பெற்றிருத்தல் கூடாது. விதவைகள், ஆதரவற்றவர்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். 30 சதவீதம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பிலிருந்து பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பங்களை, 30.09.2020க்குள் தங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரிடம் மட்டுமே வழங்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு மண்டல இணை இயக்குநர் அலுலவலகம் விருதுநகர், விருதுநகர், திருவில்லிபுத்தூர் உதவி இயக்குநர் அலுவலகங்கள், தங்கள் அருகில் உள்ள கால்நடை மருந்தக, கால்நடை உதவி மருத்துவரை அணுகி திட்டத்தில் பயன் பெற மாவட்ட ஆட்சித்தலைவர் இரா.கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
