width:460px height:286px செய்திகள்

மா சாகுபடியில் பழ ஈக்களால் பாதிப்பு தோட்டக்கலைத் துறை ஆலோசனை




மா சாகுபடியில் பழ ஈக்களால் ஏற்படும் பாதிப்புகளை, பூச்சி கொல்லிகள் பயன்படுத்தாமல் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தோட்டக்கலை துறை விளக்கமளித்துள்ளது.

கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றிய பகுதிகளில், பாசன வசதி குறைவாக உள்ள நிலங்களில், மா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பராமரிப்பு அதிகம் தேவையில்லை என்பதால் பலர் மா சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆண்டுக்கு ஒரு முறை கணிசமான வருவாயும் விவசாயிகளுக்கு கிடைக்கிறது.

இந்நிலையில், மாம்பழத்தில் ஏற்படும் பழ ஈக்கள் தாக்கம், அதிக சேதத்தை ஏற்படுத்துகின்றன. இது மா பயிரிடும் விவசாயிகளுக்கு மட்டுமல்லாது நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும், பழ ஈக்களை கட்டுப்படுத்த, பூச்சி கொல்லி தெளிக்க ஆரம்பித்தால், அதிக செலவு ஏற்படுவதுடன், பூச்சி கொல்லி ரசாயனம் பழங்களில் படித்து, பாதிப்பு ஏற்படுத்தும் வாய்ப்பும் உள்ளது. இதற்கு மாற்றாக, பூச்சிக்கொல்லிகள் அற்ற, பழ ஈ மேலாண்மை முறையை விவசாயிகள் கையாளலாம். ஈக்களால் பாதித்த பழங்களை பறித்து அகற்ற வேண்டும்.

மரத்தை சுற்றி உழவு செய்து, பழ ஈக்களின் கூட்டுப்புழுக்களை அழிக்கலாம். ‘மெத்தில் யூஜீனால்’ கவர்ச்சிப் பொறியை ஹெக்டேருக்கு, 10 வீதம் வைத்து பழ ஈக்களை கவர்ந்து அழிக்கலாம். செண்டுமல்லிப் பூவிலிருந்து எடுக்கப்படும் ‘பைரித்ரம்’ எனும் சாற்றை, தண்ணீருடன் கலந்து தெளிக்கலாம். ‘ஒப்பியஸ் காட்பன்சேட்டஸ்’ மற்றும் ‘ஸ்பாலஞ்சியா பிலிப்பைன்ஸ்’ போன்ற புழு ஒட்டுண்ணிகளை விட்டு, புழு தாக்குதலை தடுக்கலாம் என தோட்டக்கலை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.




தற்போதைய செய்திகள்