வாழையைத் தாக்கும் நூற்புழுக்களில் மிகவும் முக்கியமானவை துளைப்பான் நூற்புழு, வேர் அழுகல் நூற்புழு, வேர்முடிச்சு நூற்புழு மற்றும் சுருள் வடிவ நூற்புழுக்களாகும். இப்புழுக்களின் தாக்குதலினால் இலைகளின் எண்ணிக்கை குறைந்தும், இலைகள் மஞ்சள் நிறமாகியும். மரங்களின் வளர்ச்சி குன்றியும் காணப்படும். நூற்புழுக்களின் தாக்குதலினால் வேர்கள் கருமை அல்லது கருஞ்சிவப்பு நிற அழுகளோடும் வேர் முடிச்சுகளோடும் காணப்படும். இவ்வாறு வேர்கள் அழுகுவதால் மரங்கள் மண்ணில் பிடிப்பின்றி காற்றில் எளிதில் சாய்ந்துவிடும் தன்மை உடையதாக இருக்கும்.
வாழையைத் தொடர்ந்து சாகுபடி செய்வதினை தவிர்த்து தானியப்பயிர்கள் மற்றும் பருத்தி போன்ற பயிர்களை சாகுபடி செய்தின் மூலம் நூற்புழுவினைக் கட்டுப்படுத்த முடியும். வாழைக் கன்றுகள் நடவு செய்த 45 நாட்களுக்கு பிறகு பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பு, தக்கைப் பூண்டு ஊடுபயிராக பயிரிட்டு பூப்பதற்கு முன் பிடுங்கி வாழை மரங்களுக்கு நடுவில் இட்டு மண் அணைப்பதின் மூலம் நூற்புழுவினை கட்டுப்படுத்தலாம். நூற்புழுக்கள் உள்ள வாழைக் கன்றின் கிழங்குகளில் அழுகிய பகுதிகளை அகற்றி (2 முதல் 3 செ.மீ ஆழம் வரை) கிழங்குகள் வெள்ளை நிறம் தோன்றும்படி செய்வதின் மூலம் இத்தகைய நூற்புழுக்களைக் கட்டுப்படுத்த முடியும்.
வாழையில் வாடல் நோய் விளைச்சலில் அதிக இழப்பு (சுமார் 50 முதல் 65 சதவீதம்) ஏற்படுத்தும் நோய்களுள் ஒன்றாகும். வாழையைத் தொடர்ந்து சாகுபடி செய்வதினால் இந்நோய் அதிகமாகின்றது.
இதன் அறிகுறி முதலில் அடிச்சுற்று இலைகளின் விளிம்புகளில் மஞ்சள் நிறமாக மாறி மையப்பகுதி நோக்கி பரந்து விளிம்புகள் வாடிக்காய்ந்து போகின்றது. வாழையில் வாடல் நோய் தீவிரம் அடையும்போது அடித்தண்டு பிளந்தும் அடித்தண்டை வெட்டிப்பார்த்தால் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கடத்தும் திசுக்கள் மஞ்சள் அல்லது பழுப்பு நிறமாக மாறி இருக்கும். இத்திசுக்களில் பூஞ்சாண இழைகள் படர்ந்த சாற்றுக் குழாய் அடைக்கப்பட்டு வாழை மரமானது வாடத் தொடங்குகிறது. இந்நோய் மண் மற்றும் கிழங்குகள் மூலம் பரவுகின்றது.
வாழையைத் தொடர்ந்து நெல் மற்றும் கரும்பினை பயிர் செய்தின் மூலம் மண்ணில் பூஞ்சாணம் வளர்வதை கட்டுபடுத்தலாம். சூடோமோனாஸ் புளோரசன்ஸ் (2.5 கிலோ/எக்டர்) எதிர் நுண்ணுயிரியை 50 கிலோ தொழுஉரம் மற்றும் வேப்பம்பிண்ணாக்கு கலந்து அடியுரமாக இடலாம். நடவிற்கு முன் கிழங்குகளின் மேலுள்ள பழைய வேர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அகற்றி கார்பன்டசிம் (1.0 கிராம்/லிட்டர்) கரைசலில் 20 நிமிடங்கள் நனைத்து பிறகு கிழங்குகளை களிமண்ணில் தேய்த்து கார்போபியூரான் குருணை மருந்தை ஒரு கிழங்கிற்கு 40 கிராம் என்ற அளவில் தூவவேண்டும். கார்பன்டசிம் 60 மில்லி கிராம் கேப்சூல் (அ) 2 சதவீதம் கரைசலை (லிட்டருக்கு 20 மிலி கார்பன்டசிம்) மூன்று மில்லி ஊசியின் மூலமாக கிழங்கில் 45 டிகிரி கோணத்தில் துளையிட்டு இட வேண்டும்.
ஆகவே வாழை விவசாயிகள் மேற்கூறிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நல்ல மகசூலை பெறுமாறு மதுரை வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் செல்விரமேஷ் மற்றும் தொழில் நுட்ப வல்லுநர் சீ.கிருஷ்ணகுமார் கேட்டுக் கொண்டனர்.
