திருநெல்வேலி மாவட்டத்தில் வாழைப் பயிரைத் தாக்கும் பனாமா வாடல் நோய் தடுப்பு முறைகள் குறித்து தோட்டக்கலை துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் நா.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது : வாழைப்பயிரில் பனாமா வாடல் நோய் தாக்கினால் இலைகள் கருகி, மட்டைகள் முறிந்து, மரத்தில் துணியை சுற்றிக் கட்டி விட்டது போன்று காட்சியளிக்கும். முதலில் இலையின் ஓரத்தில் மஞ்சள் நிறமாக காணப்படும். பின்னர் இலையின் மையப்பகுதி வரை மஞ்சள் நிறமாக மாறி தொடர்ந்து கருகி விடும்.
இந்த வாழையை குறுக்கே வெட்டிப் பார்த்தால் உள்பகுதியில் மஞ்சள் செம்பழுப்பு நிறமாக காணப்படும். வாழைத் தண்டை வெட்டி பார்த்தால் நீர் உறிஞ்சும் திசுக்கள் நிறம் மாறி பூஞ்சாணங்கள் நிறைந்திருக்கும். இதனை வெடி வாழை நோய், பனாமா வாடல் நோய் என அழைக்கப்படுகிறது.
நேந்திரன், பூவன் ரகங்கள் நோய் எதிர்ப்புத் திறன் உள்ளவை. ரஸ்தாலி, மொந்தன், கற்பூரவள்ளி மற்றும் பச்சை நாடான் ரக வாழைகளை இந்நோய் எளிதில் தாக்கும். எனவே கன்றுகளைத் தேர்வு செய்யும்போது நோய் தாக்காத ஆரோக்கியமானதாகத் தேர்வு செய்யவேண்டும். தேர்வு செய்யப்பட்ட கன்றுகளின் கிழங்குகளை களிமண் கரைசலில் நனைத்து, குழியில் கார்போபியுரான் குருணை மருந்தை தூவி நடவு செய்யவேண்டும்.
ஒரு குழிக்கு ஒரு கிலோ வேப்பம் பிண்ணாக்கு மற்றும் குழிக்கு 5 கிலோ சர்க்கரை ஆலைக் கழிவு இடவேண்டும். அமில பாங்கான நிலத்தில் 2 கிலோ சுண்ணாம்பு மண் இடுதல் வேண்டும். மழைக் காலங்களில் நிலத்தில் நீர் தேங்காமல் வடி கட்ட வேண்டும். சொட்டுநீர் பாசனம் சிறந்ததாகும்.
நோய் தடுப்பு மருந்தாக உயிரியல் முறை நோய் தடுப்பு உயிர் கொல்லியான டிரைகோடெர்மாவிரிடி ஒரு குழிக்கு 25 கிராம், 50 கிலோ மக்கிய தொழு உரம் அல்லது மண்புழு உரத்துடன் கலந்து 15 நாள்கள் நிழலில் உலர வைத்து நிலத்தில் போடுவதால் வாடல் நோயை கட்டுப்படுத்தலாம்.
3,5,7வது மாதங்களில் டிரைகோடெர்மாவிரிடி ஒரு குழிக்கு 25 கிராம் பயன்படுத்த வேண்டும். நடவு செய்த 5 மாதம் கழித்து இரு மாத இடைவெளியில் கார்பண்டாசிம் 2 சதம் அல்லது புரோபிகோனோசோல் 1 சதம் என்ற பூஞ்சாண கொல்லியை மரத்தைச் சுற்றி நீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
நோய் அறிகுறி தென்பட்டால் அனைத்து மரங்களுக்கும் கார்பண்டாசிம் 2 சதம் கரைசலை ஊசி மூலம் 3 மில்லி அளவில் கிழங்கில் செலுத்த வேண்டும். மருந்து கரைசலுக்குப் பதில், 60 மில்லி கார்பண்டாசிம் நிரப்பிய குப்பியை கிழங்கில் 7 மில்லி மீட்டர் துளையிட்டும் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
