காரைக்காலில் விவசாயிகளுக்கு ஆத்மா திட்டம் மூலம் நன்னீர் கலப்பு மீன்வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
காரைக்காலில் ஆத்மா திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு, கரோனா பொது முடக்கக் காலத்தில் சுயத்தொழில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் கலப்பு மீன்வளர்ப்பு பயிற்சியளிக்கப்படுகிறது. மீன்வளர்ப்பு செயல் விளக்கம் மற்றும் இடுபொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி, தென்னங்குடி கிராமத்தில் நடைபெற்றது.
பயிற்சியில், ஆத்மா திட்ட துணை இயக்குநர் ஆர். ஜெயந்தி ஆத்மா திட்டங்கள் குறித்தும், விவசாயிகள் குழுவாக சேர்ந்து தொழில் முனைவோராவதன் பயன்கள், இத்திட்டத்தில் விவசாய உபத்தொழில்களான மீன்வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு முறைகள், இதன்மூலம் வருவாய் ஈட்டும் முறை குறித்தும், மீன்வளத் துறை துணை இயக்குநர் ஆர்.கவியரசன் நன்னீர் மீன்கள் வளர்ப்பு முறைகள், இவற்றை சந்தைப்படுத்தும் முறை, மீன்வளர்ப்பு முறை எளிதானது, இதன்மூலம் இளைஞர்கள் பலர் வேலை வாய்ப்பு பெறமுடியும் என்றும், மீன்வளத் துறை சார்பில் உதவி ஆய்வாளர் ஏ.பாலமுரளி மீன்வளர்ப்பு திட்டம் குறித்தும் பேசினர்.
பயிற்சியின்போது, மீன்வளர்ப்பு ஆத்மா குழுவான உன்னால் முடியும் ஆத்மா குழுவினருக்கு கலப்பு மீன் வளர்ப்புக்கான இடுபொருள்கள் வழங்கப்பட்டன. முன்னதாக, தென்னங்குடி வேளாண் அலுவலர் டி.பாலசண்முகம் வரவேற்றார். ஏற்பாடுகளை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் பி.புருஷோத்ராஜ், டி.கண்ணன், துணை வட்டாரத் தொழில்நுட்ப மேலாளர் பி. பார்த்திபன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
