மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தொடர்ந்து அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக அதே இடத்தில் நீடிக்கும்.
இன்று கனமழை:
இன்று (05/12/2020) கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன முதல் மிக மழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
நாளையும் கனமழை:
நாளை (06/12/2020) இராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், இடியுடன் கூடிய கன முதல் மிக மழையும் , சிவகங்கை, தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், ஒருசில இடங்களில், இடி மின்னலுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு தினங்களுக்கு, மிதமான மழையும் அவ்வப்போது சில இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
அதிகபட்ச மழைப்பொழிவு (சென்டிமீட்டர்):
கடந்த 24 மணி நேரத்தில் கொத்தவச்சேரி (கடலூர்) 19, நாகப்பட்டினம், காரைக்கால் தலா 16, குடவாசல் (திருவாரூர்), புவனகிரி தலா 15, சேத்தியாத்தோப்பு 14, தரங்கம்பாடி 13, சீர்காழி, டிஜிபி அலுவலகம் சென்னை, வெம்பாக்கம் 12, இராமேஸ்வரம், அண்ணா பல்கலை, திருப்பூண்டி, காயல்பட்டினம் தலா 11, கொள்ளிடம், எம்.ஜி.ஆர் நகர் சென்னை தலா 10, ஊத்துக்கோட்டை, தூத்துக்குடி, தலைஞாயிற், சிதம்பரம் தலா 9 சென்டி மீட்டர் மழைப் பொழிந்துள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை:
டிசம்பர் 05 இன்று, குமரிக்கடல், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு மீனவர்கள் (Fishers) செல்ல வேண்டாம். டிசம்பர் 05 மற்றும் 06, கேரள கடலோரப் பகுதி, லட்சத் தீவு மற்றும் மாலத்தீவுகளுக்கு செல்ல வேண்டாம். டிசம்பர் 07 அன்று, கேரள கடலோரப் பகுதி, தென் கிழக்கு அரபிக் கடல், லட்சத் தீவு மற்றும் மாலத்தீவுகளுக்கு (Maldives) செல்ல வேண்டாம்.
