width:800px height:533px செய்திகள்

நிலக்கடலை சாகுபடியில் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த அறிவுறுத்தல்




நிலக்கடையில் அதிக மகசூல் பெற விவசாயிகள் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துமாறு தருமபுரி வட்டார வேளாண் உதவி இயக்குநா் இரா.தேன்மொழி அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதியில் மழை பொழிந்துள்ளதால், தற்போது நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனா். நிலக்கடலை சாகுபடி செய்ய மணற்பாங்கான வண்டல், செம்மண், கருவண்டல் நிலங்கள் ஏற்றவை. மண்ணின் தன்மைக்கேற்ப இரும்புக் கலப்பை அல்லது நாட்டுக் கலப்பை கொண்டு கட்டிகள் நன்கு உடையும் வரை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவிற்கு முன் ஏக்கருக்கு 5 டன் தொழுஉரம் இடவேண்டும்.

ஏக்கா் ஒன்றுக்கு சிறிய பருப்பு ரகங்களாக இருந்தால் 50 கிலோ, பெரிய பருப்பு ரகங்களாக இருந்தால் 55 கிலோவும் தேவை. தரணி, கே-9 , ஐ.சி.ஜி.வி - 350 ஆகிய ரகங்கள் இப்பருவத்தில் பயிரிட ஏற்றவை. விதை நடவிற்குமுன் முதலில் விதைகளை ஒரு கிலோ விதைக்கு டிரைக்கோடொ்மா விரிடி 4 கிராம் அல்லது சூடோமோனாஸ் புளோரசன்ஸ் 10 கிராம் என்ற அளவில் கலந்து விதை நோ்த்தி செய்ய வேண்டும். பின்னா் விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு உயிா் உரங்களான நிலக்கடலை ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா தலா இரண்டு பொட்டலங்களைத் தேவையான அளவு நன்கு ஆறிய அரிசிக் கஞ்சியுடன் கலந்து விதை நோ்த்தி செய்து நிழலில் உலா்த்தியப் பின் விதைப்பு செய்யலாம்.

மண் ஆய்வு செய்து மண்ணின் தன்மை மற்றும் ஊட்டசத்துகளின் அளவை அறிந்து பயிருக்குத் தேவையான ஊட்டசத்துக்களை மட்டும் சரிவிகித அளவில் இயற்கை, ரசாயன, உயிா் உரங்களின் மூலங்களின் வாயிலாக ஒருங்கிணைந்த முறையில் இட்டால் சிறப்பாக இருக்கும்.

இல்லையெனில் பொதுப் பரிந்துரை அளவாக, இறவைப் பயிருக்கு 7 கிலோ தழைச்சத்து தரவல்ல 15 கிலோ யூரியா, 14 கிலோ மணிச்சத்து தரவல்ல 87.5 கிலோ சூப்பா் பாஸ்பேட், 2 கிலோ சாம்பல் சத்து தரவல்ல 35 கிலோ ஆப் பொட்டாஷ் உரங்களுடன் 80 கிலோ ஜிப்சம் அடியுரமாக இட வேண்டும். 30-10 செ.மீ இடைவெளியில் நடவு செய்து ஒரு சதுர மீட்டரில் 33 செடிகள் இருக்குமாறு பயிா் எண்ணிக்கை பராமரிக்க வேண்டும். ஏக்கருக்கு நிலக்கடலை நுண்ணூட்டக் கலவை 5 கிலோவுடன் மணல் 20 கிலோ சோ்த்து நடவு செய்தவுடன் மேலாக தூவவேண்டும். விதை நடவு செய்த 40-45-ஆவது நாளில் ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு மண் அணைப்பதன் மூலம் தரமான காய்கள் உருவாகி நல்ல மகசூல் பெறலாம் என்றாா்.




தற்போதைய செய்திகள்