பெரம்பலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பசுக்களுக்கு ஏற்பட்டுள்ள அம்மை நோய் குறித்து, கால்நடை பராமரிப்புத்துறை சாா்பில் வெள்ளிக்கிழமை (டிச. 11) முதல் விழப்புணா்வு மருத்துவ முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக
ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 121 ஊராட்சிகளிலும் வெள்ளிக்கிழமை (டிச. 11) முதல் டிச. 31 ஆம் தேதி வரை கால்நடைகளுக்கான சிறப்பு விழிப்புணா்வு முகாம் நடத்த 40 கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதர துறைகளுடன் இணைந்து, திசையன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில், கால்நடைகளில் ஏற்பட்டுள்ள அம்மை நோய் அறிகுறிகளான தோல் புண்கள், கழுத்தில் அல்லது காலில் வீக்கம், காய்ச்சல் கண்டறியப்பட்டால் உரிய சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. இந் நோயைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ள ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும்.
