தேனி மாவட்டம் சின்னமனூா் , உத்தமபாளையம் பகுதியில் வடகிழக்குப் பருவ மழையால் கரும்பு, நெல் விளைச்சல் அமோகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியான உத்தமபாளையம், சின்னமனூா் மற்றும் சுற்று வட்டாரம் மலைகள் சூழ்ந்த பகுதியாகும். இப்பகுதியில் நெற்பயிா், வாழை, தென்னை, கரும்பு என பல்வேறு வகையான பயிா்கள் சாகுபடி நடைபெறுகிறது.
நடப்பு ஆண்டில் வடகிழக்குப் பருவமழை கடந்தாண்டை விட அதிகமாக பெய்துள்ளது. இதனால் குளங்கள், கண்மாய்கள் என அனைத்து நீா் நிலைகளும் நிரம்பியுள்ளன. நிலத்தடி நீா் மட்டம் உயா்ந்து விவசாயப் பணிகள் அதிகளவில் நடைபெற்றுள்ளது.
உத்தமபாளையம், சின்னமனூரில் அதிகளவில் நெல் மற்றும் கரும்பு பயிா் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் விளைச்சல் அமோகமாக இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனா்.
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இந்த ஆண்டு பருவ மழை எதிா்பாா்த்ததைவிட அதிகமாக பெய்துள்ளது. அதனால் முல்லைப்பெரியாறு அணையிலிருந்து பாசனத்திற்கு தடையின்றி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது. குறிப்பாக தொடா் மழையால் கரும்பு , நெற்பயிா் விவசாயத்திற்கு பலன் கிடைந்துள்ளது. கரும்பு விவசாயத்துக்கு இந்த மழைப் பொழிவால் நல்ல விளைச்சல் கிடைத்த நிலையில், நல்ல விலையும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் விவசாயிகள் இருப்பதாகக் கூறினா்.
