width:644px height:430px செய்திகள்

விலை ஆதார திட்டம் மூலம் துவரை கொள்முதல் தொடக்கம்




தருமபுரியில் குறைந்த பட்ச ஆதார விலையில் துவரை கொள்முதல் செய்யும் பணி தொடங்கியுள்ளது. இதுதொடர்பாக, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ச.ப.கார்த்திகா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது

வேளாண் உற்பத்தியை பெருக்கி விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த தமிழக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக, பயறு வகைகளை மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2019-20-ம் ஆண்டில் ராபி பருவத்தில் தருமபுரி விற்பனைக் குழு மூலம் 43.350 டன் துவரை மற்றும் காரீப் பருவத்தில் 12.150 டன் பச்சைப் பயறு கொள்முதல் செய்யப்பட்டது. இதன் மூலம் 99 விவசாயிகள் நேரடியாக பயனடைந்தனர்.

அதேபோல, 2020-21-ம் ஆண்டு காரீப் பருவ பயறு வகைகள் கொள்முதல் தொடங்கியுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 11 ஆயிரத்து 418 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ள துவரை அறுவடைக்கு தயாராகி வருகிறது.

எனவே, தருமபுரி மாவட்ட வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகக் குழுவின் கீழ் செயல்படும் தருமபுரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் 300 டன், பென்னாகரம் விற்பனைக் கூடம் மூலம் 240 டன், அரூர் விற்பனைக் கூடம் மூலம் 120 டன் துவரை கொள்முதல் செய்ய இலக்கு பெறப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் உள்ள துவரை ஒரு கிலோ ரூ. 60 விலையில் கொள்முதல் செய்யப்படும்.

இந்த கொள்முதல் 14.03.2021 வரை நடைபெறும். இத்திட்டம் மூலம் பயன்பெற விரும்பும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தக நகல் ஆகியவற்றுடன் அருகிலுள்ள விற்பனைக் கூடங்களை அணுகி பதிவு செய்து கொள்ளலாம்.




தற்போதைய செய்திகள்