கயத்தாறு அருகே, தோட்டங்களில் பயிரிடப்பட்டுள்ள உளுந்து, பாசிப்பயறு பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
கயத்தாறு அருகே சவலாப்பேரி பஞ்சாயத்தை சேர்ந்த நாகம்பட்டி கிராமத்தில் 90 சதவீத விவசாயிகள் உள்ளனர். இவர்கள் தோட்டங்களில் உளுந்து, பாசிப்பயறு போன்ற பயிர்கள் பயிரிட்டுள்ளனர்.
இந்த கிராமத்தில் மட்டும் சுமார் 847 ஏக்கரில் இந்த பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளது. ஏற்கனவே பருவத்தை முன்னிட்டு மழையை எதிர்பார்த்து விதைகளை விதைத்தனர்.
இப்பகுதியில் பருவமழை தாமதமாக பெய்ததால் விதைக்கப்பட்ட விதைகள் வீணாகின. மீண்டும் விதைகளை வாங்கி வயல்களில் விதைத்தனர்.
இந்தப் பயிர்கள் தற்போது காய் பூ பூத்து காய் காய்க்கும் நிலையில் உள்ளன. இந்த நிலையில், பயிர்களில் மஞ்சள் தேமல் நோய் தாக்கியுள்ளது. இந்த நோய் தாக்குதலால், செடிகள் ஒரு வார காலத்திற்குள் கருகி விடுகின்றன.
விளைச்சல் அடியோடு பாதிக்கும் நிைல உருவாகியுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், வேகமாக பரவும் இந்த மஞ்சள்தேமல் நோயை கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு சுமார் 20 ஆயிரம் செலவில் மருந்து வாங்கி அடித்துள்ளோம்.
ஆனால் நோய் கட்டுப்படுத்தப்படவில்லை. பயிர்கள் கருகி வருகின்றன. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பாகுபாடின்றி இழப்பீடு வழங்க வேண்டும்’ என தெரிவித்தார்.
