width:740px height:416px செய்திகள்

மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர் மழை தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி மாவட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதோடு ஒரு சில அணைகள் முழு கொள்ளளவை எட்டியதை அடுத்து அணைகளில் உபரிநீர் திறந்துவிடப்பட்டுள்ளது. அந்தவகையில் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் திறந்துவிடப்பட்ட 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெள்ளமாகப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

அதாவது பாபநாசம் அணையில் இருந்து 10 ஆயிரம் கன அடி, மணிமுத்தாறு அணையில் இருந்து 21 ஆயிரம் கன அடி,  கடனா அணையில் இருந்து 2, 400 கன அடி வீதம் உபரி நீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. அத்துடன் ஆங்காங்கே வந்துசேரும் காட்டாற்று வெள்ளமும் சேர்ந்து 40 ஆயிரம் கனஅடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றின் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதே போல் தொடர் மழையால் காரையார் சொரிமுத்தய்யனார் கோயிலுக்குச் செல்லும் பாலம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் செல்வதால் நேற்று காலை 10 மணி அளவில் சுற்றுலா பயணிகள் கோயிலுக்குச் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதையடுத்து பாபநாசம் வனச்சோதனை சாவடியும் மூடப்பட்டது. பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் பாபநாசம் பாபநாசர் கோயில் முன்பகுதியில் உள்ள விநாயகர் கோயிலை பாதியளவுக்கு மூழ்கடித்த படி செல்கிறது. நேற்று மதியமும் தொடர்ந்து மழை பெய்தது. இருப்பினும் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் கலெக்டர் விஷ்ணு பாபநாசம் தாமிரபரணிஆறு, பாபநாசம் அணை, சொரிமுத்தய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது சப் கலெக்டர் பிரதீக் தயாள், தாசில்தார் வெங்கட்ராமன், மின்வாரிய செயற்பொறியாளர் வெங்கடாசலம், விஏஓக்கள் பால சுப்பிரமணி, பிரேம்குமார், உதவியாளர் முத்துகுமார் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் பலர் உடனிருந்தனர். இரவில் பாபநாசம் யானைப் பாலத்தை வெள்ளம் மூழ்கடித்து சென்றது. இதையடுத்து போக்கு வரத்து நிறுத்தப்பட்டது. பாப்பாக்குடி:  நீர்நிலைகளில் பெய்து வரும் கன மழையால் முக்கூடல் தாமிரபரணி ஆற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் முக்கூடல் காவல் நிலையம் அருகேயுள்ள  பகுதி மற்றும் திருப்புடை மருதூரில் வயல்களில் வெள்ளம் புகுந்தது. இதனால் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். இதே போல் முக்கூடல்-  வீரவநல்லூர், முக்கூடல்- திருபுடைமருதூர் சாலையில் சுமார் 2 அடி உயரத்தில் வெள்ள நீர் செல்வதால் அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
 தாழ்வான பகுதியில் வசிப்போரை வருவாய்த்துறையினர் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைத்துள்ளனர்.

நந்தன்தட்டை காலனி பகுதியில் உள்ள 2 வீடுகள் கனமழையால் இடிந்தது. வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதனால் அந்த பகுதி மக்களை தற்காலிக முகாம்களில் தங்க வைக்கபட்டனர்.சேதமடைந்த பகுதிகள் மற்றும் முக்கூடல் அண்ணாநகர் புதுக்குளம், ஆப்ரியான்குளம், கோரன்குளம் உள்ளிட்ட நீர் நிலைகளை கலெக்டர்  விஷ்ணு பார்வையிட்டு ஆய்வுநடத்தினார். அப்போது உதவி கலெக்டர் அலமேலு மங்கை, சேரன்மகாதேவி தாசில்தார் வெற்றிசெல்வி மற்றும் அதிகாரிகள்  உள்ளிட்டோர் உடனிருந்தனர். பாதுகாப்பு முகாம் தயார் இதனிடையே மணிமுத்தாறு அணைப் பகுதியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட நெல்லை கலெக்டர் விஷ்ணு, பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘பாதுகாப்பு முகாம்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன.

ஏற்கனவே அம்பாசமுத்திரம் ஆலடியூரை சேர்ந்த 50 பேர் முன்னெச்சரிக்கையாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களை பாதுகாப்பாக இருக்குமாறு வருவாய்த்துறையினரும், ஊரக வளர்ச்சித் துறையினர் அறிவுறுத்தியுள்ளதோடு வெள்ள பாதிப்பை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்’’ என்றார். அப்போது டிஆர்ஓ பெருமாள், சப் க்லெக்டர் பிரதீக் தயாள், தாமிரபரணி வடிநில கோட்ட அலுவலர் அண்ணாதுரை, தாசில்தார் வெங்கட்ராமன், ஏபிஆர்ஓ மகாகிருஷ்ணன், உதவி கோட்டப் பொறியாளர்கள் மகேஷ்வரன், சிவகணேஷ் உடனிருந்தனர்.

 

https://www.dinakaran.com/
தற்போதைய செய்திகள்