பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நிலங்களில் இருந்து பனங்கிழங்குகளை எடுக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை விவசாயிகள் உற்சாகமாக கொண்டாடுவர். பூஜையில் நெல் மணிகள், காய்கறிகள், மஞ்சள் குலை, பனங்கிழங்கு வைத்து வழிபடுவர். தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர், உடன்குடி பகுதிகளுக்கு அடுத்தபடியாக எட்டயபுரம் அருகே தாப்பாத்தி, அயன்வடமலாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 50 ஆயிரம் பனை மரங்கள் உள்ளன. ஆண்டுதோறும் தை மாதம் கடைசி முதல் ஆனி வரை பதநீர் சீஸன் இருக்கும்.
அதன் பின்னர் நுங்கு சீஸன் 2 மாதங்களுக்கு இருக்கும். தொடர்ந்து முதிர்ந்த நுங்கு பனம்பழமாக மாறிவிடும். பழுத்து உதிர்ந்த பனம்பழத்தை சேகரித்து, அதனை குறுமணலில் 2 அடி ஆழம் வரை தோண்டி புதைப்பது வழக்கம். 90 நாட்களில் வடகிழக்கு பருவமழையில் ஏற்படும் ஈரப்பதத்தில், பனங் கொட்டை கிழங்காக விளைந்து, தைப்பொங்கல் சமயத்தில் கிடைக்கும்.
பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், எட்டயபுரம், அயன்வட மலாபுரம் பகுதி நிலங்களில் இருந்து பனங்கிழங்குகளை தோண்டி எடுக்கும் பணியில் பனை தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கடைகளில் 25 எண்ணம் கொண்ட ஒரு பனங்கிழங்கு கட்டு ரூ.100-க்கு விற்பனையாகி வருகிறது.
