width:1920px height:1080px மூலிகைப் பயிர்கள்

சோற்று கற்றாழை சாகுபடி..




சோற்று கற்றாழை பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஓர் பேரினமாகும். கற்றாழை லில்லியேசி தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.

இது மனிதரை என்றும் இளமையாக வைப்பதால் குமரி எனவும் அழைக்கப்படுகிறது. சித்த மருந்துவர்களால் ‘குமரி’ என்றழைக்கப்படும் இத்தாவரத்தின் தாயகம் தென்னாப்பிரிக்கா மற்றும் அரேபிய நாடுகளாகும்.

இரகங்கள் :

குர்குவா கற்றாழை, கேப் கற்றாழை, சாகோட்ரின் கற்றாழை ஆகிய இரகங்கள் உள்ளன. இந்தியாவில் குர்குவா கற்றாழை அதிகளவில் பயிர் செய்யப்படுகிறது.

பருவம்

செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.

மண்

மணல் தவிர்த்து எல்லா வகையான மண்ணிலும் கற்றாழையை சாகுபடி செய்யலாம். கார அமிலத்தன்மை 7 முதல் 8.5 வரை உள்ள மண் வகைகளில் கற்றாழை நன்கு வளரும் தன்மை கொண்டது. நல்ல வடிகால் வசதியுடன் கூடிய நிலம் மிகவும் ஏற்றது.

நிலம் தயாரித்தல்

நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் சிறிய பாத்திகளை அமைக்கவேண்டும். மலைப்பகுதிகளில் மலைச் சரிவுகளின் குறுக்காக சிறிய பார்களை அமைத்து கொள்ள வேண்டும்.

விதையளவு

கற்றாழையை தனிப்பயிராக சாகுபடி செய்யும்போது எக்டருக்கு 10,000 பக்கக் கன்றுகள் தேவைப்படும்.

தாய்ச்செடியிலிருந்து ஒன்று அல்லது இரண்டு மாத வயதுடைய பக்கக் கன்றுகளைப் பிரித்து பயன்படுத்தவேண்டும். ஒரே அளவிலான பக்கக் கன்றுகளைத் தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். இதனால் செடிகள் சீராக வளர்வதுடன் ஒரே சமயத்தில் அறுவடைக்கு வரும்.

விதைநேர்த்தி

பக்கக் கன்றுகளை பிரித்ததும் அவற்றின் வேரை கார்பன்டாசிம் கரைசலில் (லிட்டருக்கு 1 கிராம் கார்பன்டாசிம் மருந்து) ஐந்து நிமிடத்திற்கு நனைக்க வேண்டும். இவ்வாறு நனைத்த பிறகு நடுவதால் அழுகல் நோய் வராமல் பாதுகாக்கலாம்.

விதைத்தல்

செடிகள் செழிப்பாக வளர்வதற்கு செடிக்குச் செடி மூன்று அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். மலைச் சரிவுகளில் பாரின் அடிப்பகுதியில் பக்கக்கன்றுகளை நடவு செய்யவேண்டும்.

நீர் நிர்வாகம்

கற்றாழையை மானாவாரிப் பயிராக பயிர் செய்ய ஏற்றது. இறவையாக பயிரிடுவதாக இருந்தால் அதன் மொத்த பயிர் காலத்தில் ஐந்து முறை நீர்ப்பாசனம் செய்வது போதுமானது.

உரங்கள்

வளமான நிலங்களுக்கு தொழு உரம் இட்டால் போதுமானது. தரிசு மற்றும் வளமில்லாத மண்ணிற்கு செடிகளை நட்ட 20வது நாளில் ஏக்கருக்கு 30 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தை அளிக்க வேண்டும். தழைச்சத்து 120 கிலோ உரத்தை அடியுரமாக இட வேண்டும். இதனால் அதிகளவு கூழ் மகசூல் கிடைக்கும்.
 
களை நிர்வாகம்

செடிகள் நட்ட ஒரு மாதத்தில் முதல் களை எடுத்து சுற்றி மண் அணைக்க வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் களை எடுக்க வேண்டும்.

பயிர் பாதுகாப்பு

கற்றாழை செடியில் அதிகமாக பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை. நீர் தேங்கும் நிலமாக இருந்தால் வேர் அழுகல் நோய் ஏற்படும். எனவே, நன்கு வடிகால் வசதி இருக்க வேண்டும்.

அறுவடை

நடவு நட்ட காலத்திலிருந்து 7- 8 மாதங்களில் மகசூல் எடுக்கலாம். இலையில் 80-90% நீர் உள்ளதால் விரைவாக வாடிவிட வாய்ப்புள்ளது. இதனால் அறுவடை செய்த உடனே இலைகளைப் பக்குவப்படுத்தி அவற்றில் இருந்து ஜெல்லைப் பிரித்தெடுக்க வேண்டும். செடிகளை வேரோடு பிடுங்கி எடுத்த ஆறு மணி நேரத்திற்குள் பக்குவப்படுத்த எடுத்துச் செல்ல வேண்டும்.

மகசூல்

ஒரு ஏக்கரில் இருந்து 15 டன் கற்றாழை இலை மகசூலாகக் கிடைக்கும்.

 




தற்போதைய செய்திகள்