width:803px height:412px கால்நடை

மலை மாடுகள் !!




நம் முன்னோர்கள் பழங்காலத்தில் காடுகளில் இயற்கையாக மேய்ந்து, திரிந்து இனப்பெருக்கம் செய்து, தன்னிச்சையாய் வாழ்ந்துகொண்டிருந்த காட்டின விலங்கான காட்டு மாடுகளை வீட்டு பிராணிகளாக்கினர்.

இந்த காட்டு மாட்டில் காளை மாட்டை ஏர் உழவவும், ஏற்றம் இறைக்கவும், வண்டி மாடாகவும் பழக்கி பயன்படுத்தினர். பெண் பசுக்களை சாணத்திற்காகவும், சிறிதளவு பாலுக்காகவும் வளர்த்தனர். பெண் பசுக்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் இல்லாத காலம்.

நாட்டுப் பசுக்களையும், வேலைக்கு தேவையில்லாத இதர காளை மாடுகளையும் மழைக்காலங்களில், விவசாய நிலங்களில் சாகுபடி செய்யும் பருவத்தில் மலைக்கு ஓட்டிச் சென்று மேய்ச்சலுக்கு விடும் பழக்கம் தமிழகத்தில் தொன்று தொட்டு இருந்துவரும் பழக்கம்.

மலையில் சில மாதங்கள் மேய்ந்துவிட்டு விவசாய நிலத்தில் வெள்ளாமை முடிந்தபின்னர் கீழே கொண்டு வருவர். அதே போல் பயிர் செய்யப்படாத காலங்களில் விவசாய நிலத்தில் இந்த மலை மாடுகள் அல்லது கிடை மாடுகளை மேய்ச்சலுக்கு விடுவர். மலை மாடுகள் மூலம் கிடை அமர்த்தி விவசாய நிலத்திற்கு எரு அளிக்கப்படுகின்றது.

மலையில் மேயும் சமயம் மலைச்சரிவுகளில் ஏறி, இறங்கி பழக்கப்பட்ட உடல்கூறு சற்று எடை குறைவாக அதே சமயம் காட்டு மிருகங்களை எதிர்கொள்ளும் துணிச்சலும் திறனும் பெற்று விறுவிறுப்பாக எதிரியை நோக்கி பாயும் திறனும், மோப்பம் பிடிக்கும் திறனும், வலுவான உடல்கட்டும் உள்ளதால் ஜல்லிக்கட்டு மாட்டிற்காக பழக்கப்படுத்தவும், ரேக்ளா வண்டி பந்தயத்திற்கும் மலை மாடுகளின் காளைக்கன்றுகளையே தேர்வு செய்து பழக்கி வந்தனர்.

இந்த மலை மாடுகள் வெயில், மழை, பனி போன்ற பருவ சு+ழலுக்கு தாக்குபிடித்து மேற்கூரையின்றி வெட்டவெளியில் வாழ்ந்துவரும் தன்மை உடையது. காணை நோய், குந்துக் காய்ச்சல் போன்றவை பெரும்பாலும் வருவதில்லை.

இவை இயற்கையாக மேய்ந்து வருவதால் மலை மாடுகளின் பால் ருசிமிக்கதாக கொழுப்புச்சத்துடன் திகழும். இதனை குழந்தைகளுக்கு தரும் சமயம் நல்ல உடல் வளர்ச்சி கிடைக்கும்.

இந்த மலை மாடுகளின் பாலை காய்ச்சும் போதே நல்ல மணம் தெரியும். கூடுதலான அளவு வெண்ணெயும் கிடைக்கும்.

இவ்வாறு மலை மாடுகள் நம் இனத்துடன் மற்றும் நம்முடைய வாழ்வுடனும் ஒன்றாக இப்போது வரையும் உள்ளது.
மாடுகளில் உள்ள சுழிகள் !!

மாடுகளில் உள்ள சுழிகளில் நன்மை தரும் சுழிகளும் தீமை தரும் சுழிகளும் உண்டு. அதை பற்றி காண்போம்.

கோபுர சுழி, லட்சுமி சுழி, தாமணி சுழி, விரிசுழி, இரட்டை கவர் சுழி, பாசிங் சுழி, ஏறு புரான் சுழி, விபுதி சுழி, கொம்புதானா சுழி, ஏறு நாகச் சுழி, நீர் சுழி போன்ற சுழிகள் இருந்தால், அவை நன்மை தருபவை ஆகும்.

அதே போல் அக்கினி சுழி, முக்கண் சுழி, குடைமேல் குடை சுழி, விலங்கு சுழி, பாடை சுழி, பெண்டிழந்தான் சுழி, நாகப்பட சுழி, தட்டு சுழி, துடைப்பை சுழி, புட்டாணி சுழி, படைக்கட்டு சுழி, இறங்கு புரான் சுழி, புரான் சௌவல் சுழி, வால்முடங்கி சுழி, இறங்கு நாக சுழி, கருநாகச் சுழி, மென்னிப்பிடி சுழி போன்ற சுழிகள் இருந்தால், அவை தீமை கொடுக்கும் சுழிகள் ஆகும்.

இந்த சுழிகள் மாடுகளின் உடலில் இருக்கின்ற இடம் அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் மாடுகளை வாங்குகின்றனர்.




தற்போதைய செய்திகள்