மக்காச்சோளம் ஒரு முக்கியமான தானியப்பயிராகும். தானியப்பயிர்களின் அரசி என்று இது அழைக்கப்படுகிறது. மற்ற பயிர்களை ஒப்பிடுகையில் மக்காச்சோள சாகுபடிக்கான வேலையாட்களின் தேவை குறைவு. சாகுபடி செலவு, பூச்சி நோய் தாக்குதல் மிகவும் குறைவு. குறைந்த காலத்தில் 100-105 நாள்களில் நல்ல வருவாய் தரக்கூடிய தானியப்பயிராகும். எல்லாக் காலநிலையிலும், ஆண்டு முழுவதும் சாகுபடி செய்ய ஏற்ற பயிர். 1500க்கும் மேற்பட்ட பயன்பாடுகள் இருப்பதாலும், தேவை அதிகரித்துள்ளதாலும், வியாபாரிகள் உழவர்களைத் தேடிவந்து கொள்முதல் செய்வதாலும் வேளாண் பெருமக்கள் விரும்பி அதிக பரப்பளவில் இதனை சாகுபடி செய்கின்றனர்.
பருவகால நிலை மாற்றத்தினால் பாதிப்பு
அதிகப்படியான மனித செயல்பாடுகளால் பசுமை வாயுக்கள் அதிக அளவு வெளிப்பட்டு வெப்பமயமாதல் நிலையினை அடைந்துள்ளது.
வெப்பநிலை உயர்வு, வறட்சி, அதிக மழைப்பொழிவு, கடல் மட்ட மாற்றங்கள், பூச்சி, நோய் தாக்குதலில் மாற்றம், மகசூல் பாதிப்பு ஆகியவை இவற்றின் வெளிப்பாடாகும். 2° செல்சியஸ் வெப்பநிலை உயர்வால் கரி, ராபி பருவத்தில் 15-17 சதம் வரை விளைச்சல் இழப்பு ஏற்படுகின்றது. அதிக மழைப்பொழிவினைக்காட்டிலும் குறைவான மழை அளவு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகின்றது. மக்காச்சோள வளர்ச்சி நிலையில் இனப்பெருக்க பருவம் குறிப்பாக ஆண் மஞ்சரி உருவாக்கம், மணிபிடிப்பு நிலையில் ஏற்படும் வறட்சியினால் விளைச்சல் இழப்பு ஏற்படுவதுடன் மணியின் அளவு குறைகின்றது. அதிக மழைப்பொழிவினால் சாகுபடி நிலங்களில் நீர்த்தேக்கம் வருகிறது. இவற்றால் கரியமில வாயு, எத்திலீன் மற்றைய நச்சு வாயுக்கள் உருவாகி வேர்களின் சுவாச நிலையில் பாதிப்பை உண்டாக்குகின்றன. ஊட்டச்சத்துகளின் பற்றாக்குறை பயிரில் ஏற்படுவது மட்டுமல்லாமல் இரும்பு, மக்னீசியம் சத்துக்கள் அதிகளவில் எடுக்கப்பட்டு நச்சுத்தன்மை ஏற்படுகிறது. பயிர் விளைச்சலில் 25-30 சதம் பாதிப்பு ஏற்படுகின்றது. மக்காச்சோள பயிர்கள் சல்லிவேர் அமைப்பைப் பெற்றிருப்பதால் வறட்சியையும், நீர்த்தேக்க நிலையையும் தாங்கி வளராத தன்மையை கொண்டது. எனவே இந்த இடர்பாடான சூழ்நிலையில் பார்கள் அல்லது மேட்டுப்பாங்கான அகலப்பாத்திகளில் விதைப்பு செய்வதால் குறைந்த காலத்தில் அதிக மழை பெறும் தருணத்தில் சால்கள் வடிகாலாக அமைகின்றன. குறைந்த மழை பெறும் தருணத்தில் கிடைக்கக்கூடிய மழை நீரை மண்ணில் நிலை நிறுத்தி பயிர் வளர்ச்சி பெறும்.
ஒரு பயிரின் விளைச்சலை நிர்ணயிப்பதில் செடிகளின் எண்ணிக்கை முக்கிய பங்கு வகிக்கின்றன. விதைப்பு செய்த 7-8 ஆம் நாளில் நல்ல தரமான நாற்றுகளை விட்டுவிட்டு தேவையற்ற மற்ற செடிகளை நீக்கிவிட வேண்டும். வெதுவெதுப்பான சுடுநீரில் மக்காச்சோள விதைகளை மூன்று மணிநேரம் ஊறவைத்து நிழலில் உலர்த்தி பின்னர் விடுபட்ட இடத்தில் விதைப்பு செய்வதால் விதைகள் நன்கு முளைப்பதோடு மட்டுமல்லாமல் குருத்து பூச்சி தாக்குதலும் குறைகிறது.
உரமிடுதல்
மக்காச்சோளம் அதிக ஒளிச்சேர்க்கை திறன்மிக்க (C4) 51T6 JJ வகையைச் சார்ந்ததால் வளர்ச்சிக்கும், விளைச்சலுக்கும் அதிகப்படியான பேரூட்டங்களையும், தேவையான அளவு நுண்ணூட்டங்களையும் மண்ணிலிருந்து எடுத்துக் கொள்கின்றது. மண் ஆய்வின்படி சமச்சீரான உரமிடுதல் சிறந்த முறையாகும். அப்படி இல்லையெனில் வீரிய ஒட்டுரக மக்காச்சோளப்பயிருக்கு பரிந்துரை செய்யப்படும் 135.62.5:50 கிலோ/எக்டர் என்ற அளவில் தழை மணி சாம்பல் சத்துக்களை இடவேண்டும். இவற்றில் 100 சத மணிச்சத்து, 25 சதவீதம் தழைச்சத்து, 50 சதவீதம் சாம்பல் சத்தினை அடியுரமாகவும், மீதமுள்ள 50 சதவீதம் சாம்பல் சத்தினை ஆறாவது கணு நிலையிலும் (25 ஆம் நாள்), 25 சதவீதம் தழை, 50 சதவீதம் சாம்பல் சத்தினை ஒன்பதாவது கணு நிலையிலும் (45 ஆம்நாள்) மேலுரமாக இடவேண்டும். ஆறாவது முதல் ஒன்பதாவது கணு உருவாகும் நிலையில் பயிரின் வளர்ச்சியினைக் காட்டிலும் வேரின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். நீரில் கரையும் தன்மையுடைய 19:1919 எனும் உரத்தினை 0.5-1.0 (5-10கிராம் லிட்டர்) சத கரைசலாக 30ஆம் நாள், 45 ஆம் நாளில் தெளிப்பதால் உரப்பயன்பாட்டுத்திறன் அதிகரித்து விளைச்சல் பெருக்கம் ஏற்படுகின்றது.
களைக்கட்டுப்பாடு
களைகள் பயிருடன் நீர், நிலம், சத்துக்களுக்கு போட்டியிட்டு விளைச்சலை வெகுவாக குறைக்கின்றது. களைமுளைக்கு முன் பயன்படுத்தப்படும் அட்ரசின் என்னும் களைக்கொல்லியினை (50 சதம் நனையும் தூள்) எக்டருக்கு 500 கிராம் என்ற அளவில் தேவையான அளவு தண்ணிரில் கலந்து தெளிப்பானில் விசிறி நாசிலைப் பயன்படுத்தி விதைப்பு செய்த மூன்றாவது நாள் தெளிக்க வேண்டும். பின்னர் 40-45 நாளில் களை எடுக்க வேண்டும்.
பாசனம்
அதிகப்படியான நீர் தேங்குவதாலும், வறட்சியாலும், மக்காச்சோளப்பயிரில் அதிகப்படியான விளைச்சல் இழப்பு ஏற்படும். நீர் தேங்குவதால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்க அதிக அளவில் தழைச்சத்தினை இடவேண்டும். வளர்ச்சிப்பருவத்தில் ஏற்படும் வறட்சியினால் மூன்று சத விளைச்சல் இழப்பும், பூக்கும் பருவத்தில் 15சத விளைச்சல் இழப்பும், மகரந்த சேர்க்கை நிலையில் ஏற்படும் வறட்சியினால் அதிக விளைச்சல் இழப்பும் ஏற்படும். மக்காச்சோளப் பயிருக்கு 600-700 மிமீ தண்ணிர் தேவைப்படுகின்றது. பாசன நீர் அதிகம் தேவைப்படும் நெல், கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு மாற்றுப்பயிராக மக்காச்சோளத்தை அதிகப்பரப்பளவில் சாகுபடி செய்வதின் மூலம் வேளாண் பெருமக்கள் நல்ல வருமானம் பெறலாம்.
நீர் பயன்பாட்டுத்திறனைக் கணக்கிடுகையில் ஒருகிலோ நெல் மணிகள் உற்பத்தி செய்ய 2400 லிட்டர் நீர் தேவைப்படுகின்றது. நெல் விளைச்சலும் எக்டருக்கு 5000 கிலோ என்ற நிலையில் உள்ளது. ஆனால் ஒரு கிலோ மக்காச்சோளம் உற்பத்தி செய்ய 800 லிட்டர் நீர் போதுமானது. கிடைக்கக்கூடிய விளைச்சலும் எக்டருக்கு 7500 கிலோ என்ற அளவில் உள்ளது. எனவே நீர் பற்றாக்குறை உள்ள தருணத்தில் நெற்பயிரினைச் அதிகப் பரப்பளவில் பயிரிடுவதைத் தவிர்த்து வீரிய மக்காச்சோளப் பயிரினைப் பயிரிடுவதால் குறிப்பிடத்தக்க அளவு நீர் சேமிப்பையும், நிறைவான விளைச்சலைப் பெறலாம். மொத்த பாசன நீர் தேவையில் 50 சதம் ஆண்மஞ்சரி உருவானதிலிருந்து 30 - 35 நாள்களுக்குள் தேவைப்படுகின்றது.
சொட்டு நீர் உரப்பாசனம்
இறவை மக்காச்சோள சாகுபடியில் சொட்டு நீர் உரப்பாசன முறையை நடைமுறைபடுத்துவது சிறப்பு வாய்ந்ததாகும். இதனால் பேரூட்டச்சத்துக்களான தழை, மணி, சாம்பல் சத்துக்கள் மட்டுமில்லாமல் நுண்ணூட்டச் சத்துக்களும் பயிர்களின் வேர் பகுதியில் கிடைக்கப் பெறுகின்றன. பாசன நீரின் விரையம், ஊட்டச்சத்துக்களின் விரயம் குறைகின்றது. கால அளவு, வேலையாட்களின் எண்ணிக்கையில் சிக்கனம் உண்டாகின்றது. உரங்களின் பயன்பாட்டுத்திறன் அதிகரிக்கப்படுகின்றது. தழைச்சத்து திறன் 95, மணிச்சத்துத் திறன் 45, சாம்பல் சத்தின் திறன் 85 சதம் அதிகரிக்கின்றது. பயிரூட்டச்சத்துக்கள் முற்றிலும், பயிரினால் உறிஞ்சப்படுவதால் விளைச்சல் பெருகுவதோடு, தரமான விளைபொருளும் கிடைக்கின்றது. பயிரில் களைகள், பூச்சி, நோய்களின் தாக்கம் குறைகின்றது. மண்வளம் குன்றுவது, பாசன நீரின் மாசு இவைகள் தடுக்கப்படுகின்றன. மானாவாரி சாகுபடி பகுதிகளில் பண்ணைக் குட்டைகள் அமைத்து மழை நீரினை அறுவடை செய்து தெளிப்பு பாசனத்தின் மூலம் வறட்சியான சூழ்நிலையில் குறிப்பாக 20-30 ஆவது நாளில் பாசனம் செய்வதால் அதிக விளைச்சல் கிடைக்கப்பெறலாம்.
மக்காச்சோள மேக்சிம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ள மக்காச்சோளத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டரான மக்காச்சோளமேக்சிம் எக்டருக்கு 7.5 கிலோ 500 லிட்டர் தண்ணிரில் தேவையான ஒட்டு திரவம் கலந்து ஆண்மஞ்சரி, மணி உருவாகும் பருவத்தில் தெளிப்பதால் மணி பிடிக்கும் திறன் அதிகரித்து 20 சதம் வரை விளைச்சல் கூடுகின்றது. வறட்சியைத் தாங்கும் திறனும் அதிகரிக்கின்றது.
ஊடுபயிர்
மக்காச்சோளத்துடன் உளுந்து, பச்சைப் பயிறு, தட்டைப்பயிறு, சோயாமொச்சை போன்ற பயிறுவகைப் பயிர்களை ஊடுபயிராக சாகுபடி செய்வதால் குறிப்பாக மானாவாரி சாகுபடியில் மழைபொய்க்கும் நிலையில் வருவாயைப் பெறமுடியும். சாதாரண சாகுபடி சூழலில் நிலத்தின் களைகள் கட்டுபடுத்தப்பட்டு நீர் பிடிப்புத்தன்மை, மண்ணின் வளம் அதிகரிக்கின்றது.
அறுவடை
மக்காச்சோளத்தின் வயது, முதிர்ச்சி அறிகுறிகளை வைத்து இயந்திரத்தினைப் பயன்படுத்தி அறுவடை செய்வதனால் மானாவாரியில் எக்டருக்கு சராசரியாக 3000-4000 கிலோ வரையிலும் இறவை சாகுபடியில் 6000 - 7000 கிலோ வரையிலும் விளைச்சலைப் பெறமுடியும். மணிகளை சேமிக்கும் நிலையில் நன்கு வெயிலில் உலர்த்தி 12 சத ஈரபதத்தில் சேமிப்பது மிக அவசியம்.
ஆதாரம் : உழவரின் வளரும் வேளாண்மை
