width:px height:px கால்நடை

கால்நடைகளுக்கு ஒரு எளிய தீவனம்




அசோலா – கால்நடைகளுக்கு குறிப்பாக கறவை மாடுகளுக்கு ஒரு எளிய தீவனமாக உள்ளது. ஏனெனில் இதனை சுலபமாக வளர்க்க முடியும். அதன் உற்பத்தி செலவும் குறைவாகவே உள்ளதால், பல மாநிலங்களில் இதனை கால்நடைகளுக்குத் தீவனமாக அளிப்பது வழக்கத்தில் உள்ளது. கால்நடைகளுக்கு உரிய பசுந்தீவனத்தின் உற்பத்தி வெகுவாக குறைந்துள்ள நிலையில், அசோலாவினை உற்பத்தி செய்து, தீவன செலவினை குறைக்க கறவைப் பசுக்களை வளர்ப்போர் தெரிந்து கொள்வது அவசியம்.

 

அசோலா மிகவும் அதிக அளவு சுமார் 20 சதவீதம் புரதச் சத்தினைக் கொண்டுள்ள ஒரு சத்துணவாகும். இதில் அமினோ அமிலம், கேரோடின் சத்து மற்றும் வைட்டமின் ஏ போன்றவை அதிகம் உள்ளதால், இதனை உட்கொண்ட பசுவின் பாலில் கொழுப்பு சத்து அதிகரித்தும், பாலின் தரம் உயரவும் வாய்ப்புள்ளது. தினசரி 1.5 கிலோவிலிருந்து 2 கிலோ அசோலா அளிக்கும் போது பால் உற்பத்தி சுமார் 15 சதவீதம் உயரும் என கண்டறியப்பட்டுள்ளது.

அசோலாவினை நிழலில் மரத்திரையில் வளர்க்கலாம். ஒரு பாலித்தீன் தார்பாலின், தரையில் 6 அடி * 4 அடி * 2.5 அடி ஆழத்தில் அல்லது 12 அடி * 4 அடி * 2 அடி குழி அமைத்து, அதில் வளர்க்கலாம். இதற்கு குழியின் ஆழம் சமமாக இருத்தல் அவசியம்.

தார்ப்பாலின் மீது, சுமார் 10லிரிந்து 15 கிலோ அளவில் விளைச்சல் மண்ணினை பரவலாகப் போட வேண்டும். அதன் மீது, 2 கிலோ மாட்டுச்சாணம், 30 கிராம் சூப்பர் பாஸ்பேட் ஆகியவற்றை, 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, மண்ணின் மீது கரைசலாகப் பரப்ப வேண்டும். 4 அங்குல அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

அரை கிலோவிலிருந்து 1 கிலோ அளவிற்கு அசோலா பயிரினை விதைக்க வேண்டும். 10 நாட்களுக்குள் இது குழியின் அனைத்துப் பகுதிகளிலும் பரவிக் காணப்படும். இதிலிருந்து ஒரு நாளைக்கு 500லிருந்து 600 கிராம் அசோலா அறுவடை செய்யலாம்.

வாரம் ஒருமுறை 1 கிலோ மாட்டுச் சாணத்துடன், 20 கிராம் சூப்பர் பாஸ்பேட் சேர்த்தால் அசோலா நன்கு படர்ந்து வளர உதவுவதுடன், அசோலா பழுப்பு நிறம் அடையாமலும் இருக்க உதவும். பத்து நாட்களுக்கு ஒருமுறை நான்கில் ஒரு பங்கு அளவிற்கு தண்ணீரை மாற்ற வேண்டும்.

நெல் விளையும் வயல்வெளிகளில் இவை இயல்பாகவே ஊடுபயிராக வளர்ந்து காணப்படும். இதனைப் பறித்து தண்ணீரில் நன்கு அலசி, ஒரு கிலோவிற்கு ஒரு கிலோ என்ற அளவில் அடர் தீவனத்தில் கலந்து கால்நடைகளுக்கு அளிக்கலாம். புதிதாக மாடுகளுக்கு அசோலா தீவனத்தை அளிக்கும்போது, சிறிதளவு சமையல் உப்பு சேர்த்து அளித்து பழக்கப்படுத்தலாம்.

பசுந்தீவனம் பயிரிட முடியாத நிலையில் அசோலா ஒரு சிறந்த மாற்றுத் தீவனம் என்பதனால் தார்பாலின் வாங்க அரசு மான்யம் வழங்கப்படுகிறது. இதுபற்றி மேலும் விவரங்களுக்கும், செயல்முறைக்கும் உங்கள் புதுவாழ்வு திட்ட மாவட்ட பால்வள ஆலோசகர் உள்ளூர் கால்நடை மருத்துவரை அணுகவும்.

 




தற்போதைய செய்திகள்