width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

நெல் மகசூலை பாதிக்கும் நெற்பழ நோய்




நெல்லில் அதிக மகசூல் கிடைக்கும் வாய்ப்புள்ள காலங்களில் நெற்பழ நோய் நெல் மணிகளைத் தாக்கும். இது மணியின் நிறம், தரம் இவற்றை பாதிப்பதால் நல்ல விலை கிடைக்காது. இது முதலில் இங்கொன்றும் அங்கொன்றுமாக தோன்றி வெகு விரைவில் வயல் முழுவதும் பரவிவிடும். இந்நோய் “லஷ்மி நோய்” அல்லது “ஊதுபத்தி நோய்” என்றும் அழைக்கப்படுகிறது.

நோய் அறிகுறிகள்


மஞ்சள் கரிப்பூட்டை அல்லது நெற்பழ நோய் என்பது உஸ்டிலாஜினோய்டியா வைரன்ஸ் என்ற பூசணத்தினால் உண்டாகும் நோய் ஆகும். இந்நோய் தாக்கப்பட்ட பயிரில் சில நெற்கதிர்களில் சில மணிகள் ஆரம்பத்தில் மென்பட்டு துணி போன்ற பூசணத்தின் வித்துக்களால் நிரம்பி பளபளப்பான சிறிய பந்து போன்று காட்சியளிக்கும். இந்த பூஞ்சாணப் பந்தானது முதலில் மஞ்சள் நிறமாகவும், பிறகு ஆரஞ்சு நிறத்திற்கு மாறி, கடைசியாக பெரிய கருப்பு நிற நெற்பழ உருண்டைகளாக காணப்படும். நோய் தீவிரமாகும் போது கதிரில் உள்ள அனைத்து தானியங்களுமே பாதிக்கப்படும். இந்நோயினால் நெல் மணிகளின் தரம் குறைந்து விடும்.

நோய் வளர்ச்சிக்கு சாதகமான நிலைகள்
நெற்பயிர் பூக்கும் தருணம் மற்றும் கதிர் வெளிவரும் பருவத்தில் நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். பூசண வித்துக்கள் சேமிப்பு நெல் விதைகள், காற்று மூலம் பரவுகிறது. பனிப்பொழிவுடன் கூடிய குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை, காற்றில் அதிக ஈரப்பதம் (90 சதம்), அதிகளவு தழைச்சத்து இடுதல் ஆகியவை நோய் பரவ சாதகமான சூழ்நிலைகள் ஆகும். மேலும் அதிக காற்று இருக்கும்போது, பூசண பந்துகள் வெடித்து ஒரு பயிரிலிருந்து மற்றொரு பயிருக்கு எளிதில் பரவுகின்றன.

மேலாண்மை முறைகள்
  நல்ல தரமான நோயற்ற விதைகளை உபயோகப்படுத்த வேண்டும்.


  வரப்புகள், பாசன வாய்க்கால்கள் ஆகியவற்றை களைகள் இல்லாமல் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் பூஞ்சானதிற்கு மாற்று பயிர் இல்லாமல் தடுக்கலாம்.


  ஒரு கிலோ விதைக்கு 2.0 கிராம் என்ற அளவில் கார்பன்டசிம் 50 டபிள்யு. பி. உடன் விதை நேர்த்தி செய்தல் வேண்டும்.
  தழைச்சத்து அதிக அளவில் இடக்கூடாது.


 கதிர் இலைப்பருவம் மற்றும் 50 சத பூக்கும் தருணங்களில் பூசண நோய் தாக்குதலைத் தடுப்பதற்கு, பின்வரும் மருந்துகளில் ஏதேனும் ஒன்றை ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கலாம்.


 காப்பர் ஹைட்ராக்ஸைடு 77 டபிள்யு. பி. @ 500 கிராம் அல்லது புரோப்பிகோனஸோல் 25 இ.சி. 200 மில்லி
தெளித்து நெற்பழ நோயைக் கட்டுப்படுத்தலாம்.

தகவல் : ஜெ. இராம்குமார், ப. வேணுதேவன் மற்றும் ப. அருண்குமார், வேளாண்மை அறிவியல் நிலையம், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டம்.




தற்போதைய செய்திகள்