width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

கொய்யாவில் அடர் நடவு முறை
கொய்யா பொதுவாக எல்லா மாநிலங்களிலும் பயிரிடப்படுகிறது. கொய்யா அதிக ஊட்டச்சத்து மிகுந்த பழமாகும். இதில் வைட்டமின் ‘சி’ சத்து அதிகம் உள்ளது. குறைந்த முதலீடு செய்து நல்ல லாபத்தை தரக்கூடிய பழவகைகளில் இதுவும் ஒன்று. கொய்யா அனைத்து வகையான சூழ்நிலைகளையும் தாங்கி வளரக் கூடிய ஒரு பழப்பயிர். இது வெப்ப மண்டலப் பகுதிகள், மழை குறைவான பகுதிகள், உப்பு மிகுந்த, மற்றும் வளமில்லாத மண், நீர் தேங்கிய நிலம், வறண்ட நிலம் போன்ற சூழ்நிலைகளில் தாங்கி வளரக் கூடியது. எனினும் நன்கு பராமரிக்கப்பட்ட நிலத்தில் விளைச்சல் மற்றும் மகசூல் நன்றாக இருக்கும்.

கொய்யா வருடத்தில் இரு முறை காய்க்கும். இந்தியாவில் கொய்யா பயிரானது 4வது முக்கிய இடத்தை வகிக்கிறது. தமிழ்நாட்டில் கொய்யா பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் பயிரிடப்பட்டு வருகிறது. ‘ஏழைகளின் ஆப்பிள்’ என அழைக்கப்படும் கொய்யா, தற்போது தமிழ்நாட்டில் சுமார் 9,700 ஹெக்டேரில் பயிராகி 61,500 டன் மகசூல் கிடைக்கப்பெறுகிறது.

பொருளாதார முக்கியத்துவம்
கொய்யாவில் வைட்டமின் ‘சி’ ஆரஞ்சு பழத்தில் இருப்பதைப் போல் 2-5 மடங்கு அதிகமாகவும், தக்காளியில் இருப்பதைப் போன்று 10 மடங்கு அதிகமாகவும் காணப்படுகிறது. மற்ற பழங்களை ஒப்பிடும் போது கொய்யாவில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் காணப்படுகிறது. கொய்யா காயாகவும், பழுத்த பின்னர் உண்ணுவதற்கும் உகந்தது. கொய்யாப் பழத்திலிருந்து பழச்சாறு, பழப்பாகு, பழக்கூழ், பாலாடைக் கட்டி, பூத்தேன், மற்றும் பழப்பொடி போன்ற மதிப்பூட்டப்பட்ட பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.

கொய்யா ஒரு மருத்துவகுணம் நிறைந்த பழப்பயிர். கொய்யா பழங்கள் மலச்சிக்கலுக்கு ஒரு சிறந்த மருந்தாகும். பழத்தோலிருந்து எடுக்கப்படும் ‘பெக்டின்’ எனப்படும் நொதி, மதிப்பூட்டப்படும் ஜெல்லி எனப்படும் பழக்கூழ், தயாரிக்கப் பயன்படுகிறது. பழத்தில் பாஸ்பரஸ், அஸ்கார்பிக் அமிலம், போன்டோதெனிக் அமிலம், ரிபோபிளேவின், தயமின், நியாசின் போன்ற தாது உப்புகளும், உயிர்ச்சத்துக்களும் காணப்படுகின்றன. கொய்யா விதைகளில் அதிகமாக இரும்புச்சத்து உள்ளது. இலையிலிருந்து எடுக்கப்படும் சாறு, வலி நிவாரணியாகவும், வயிற்றுப் புண்களை குணப்படுத்தவும் பயன்படுகிறது.

நடவு முறைகள்
கொய்யா நடவுக்கு நிலத்தை தயார் செய்வது மிகவும் அவசியம். நிலத்தை 3 முதல் 4 முறை நன்கு உழவு செய்து நன்றாக சமப்படுத்தி களைகளை நீக்க வேண்டும். நில அமைப்பு சதுர வடிவத்திலோ அல்லது செவ்வக வடிவத்திலோ இருந்தால் நடவிற்கு வசதியாக இருக்கும். குழிகளை 75 செ.மீ நீளம், 75 செ.மீ அகலம் மற்றும் 75 செ.மீ ஆழத்திற்கு, 5 மீ X 5 மீ இடைவெளியில் எடுத்தால் ஒரு ஹெக்டேருக்கு 400 மரங்களை நட முடியும். வடக்கு தெற்கு திசை அமைப்பில் வரிசையாக மரங்களை நட்டால் சூரிய வெளிச்சம் நன்றாக ஊடுருவ வாய்ப்பாக இருக்கும். 15 முதல் 20 நாட்களுக்கு பின்னர் குழியில் மண்ணுடன் 30-40 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் 1 கிலோ சூப்பர் பாஸ்பேட் உரத்தை கலந்து இட வேண்டும். ஒவ்வொரு குழியிலும் 50 கிராம் குளோரிபைரிபாஸ் பூச்சிக் கொல்லி பவுடர் இட்டு நடுவதால் கரையான் தாக்குதலை தவிர்க்கலாம். குழியின் நடுவே கன்றுகளை நட்ட பின்னர் செடியின் அடிப்பாகத்தில் மண்ணை அணைத்து விட வேண்டும். பின்னர் நீர் பாய்ச்சி நட்ட கன்று காற்றினால் பாதிப்புக்குள்ளாகாமல் அதனை ஒரு குச்சியில் கட்டி வைத்தால் ஒட்டு கட்டிய பகுதியில் காற்றினால் ஒட்டு உடைந்து போகாமல் இருக்கும். ஜீலை முதல் அக்டோபர் மாதத்தில் நடவு செய்வதே சாலச்சிறந்தது. தவிர செடிக்கு செடி உள்ள இடைவெளியானது, மண்ணின் வளத்தை பொருத்து, மழையின் அளவு, இரகத்தின் தன்மை மற்றும் பின்பற்றப்படும் தொழிற் நுட்பங்களைப் பொருத்து மாறுபடும்.

அடர் நடவு முறை
தோட்டக்கலை ஆராய்ச்சியில் ஏற்பட்ட நவீன முன்னேற்றங்களும் வேளாண் பொறியியல் தொழில் நுட்பங்களும் இணைந்து குறைந்த இடைவெளியில் நெருக்கமாக பல மரங்கள் நடுவதை அடர் நடவு முறை என்கிறோம். இம்முறையானது மிகவும் லாபகரமான ஒன்று, ஏனெனில் குறைந்த பரப்பளவில் அதிக மகசூல் மற்றும் அதிக இலாபம் பெற இவை வழிவகுக்கிறது. அகில இந்திய ஒருங்கிணைந்த பழ முன்னேற்ற திட்டத்தின் மூலமாக பைசாபாத் ராஞ்சி மற்றும் பாஸ்தி போன்ற பல இடங்களில் சோதனை முயற்சியாக இரு அடுக்கு வரிசை முறையில் அலகாபாத் ச@பேதா என்ற இரகத்தை ஒரு ஹெக்டேருக்கு 500-600 மரங்கள் நடவு செய்து பார்த்ததில் நல்ல மகசூல் கிடைத்துள்ளது. லக்னோவிலுள்ள மத்திய மித வெப்ப மண்டல தோட்டக்கலை ஆராய்ச்சி மையத்தில் 3 மீ x 6 மீ என்ற இடைவெளியில் அலகாபாத் ச@பேதா மரங்கள் நடும்போது ஒரு ஹெக்டேருக்கு 566 செடிகள் நட்டதன் மூலம் நல்ல மகசூல் கிடைத்துள்ளது. கொய்யா உற்பத்தி யுக்திகளில் மர மேலாண்மை அதிலும் குறிப்பாக உயரத்தை கட்டுப்படுத்துதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

ஏனென்றால் நவீன கொய்யா வர்த்தகத்தில் உற்பத்தியான செலவு மகசூல் மற்றும் பழத்தின் தரம் ஆகிய மூன்றும் முக்கியமாக உற்று நோக்கப்படுகிறது. ஆகவே ஆரம்பக்கட்டத்திலேயே மேல் நோக்கி வளரக் கூடிய கிளைகளை வெட்டி உயரத்தை கட்டுப்படுத்துவது சாலச்சிறந்தது. கவாத்து செய்து கொய்யா மரங்களை வெட்டி விடுதல் அடர் நடவிற்கு ஏற்ற முக்கியமான செய்முறையாகும். ஏனென்றால் கொய்யாவைப் பொறுத்த வரையில் புதிதான கிளைகளிலிருந்து மட்டுமே பூ மற்றும் பிஞ்சுகள் பிடிக்கும்.

கொய்யாவில் அடர் நடவு முறை – ஓர் ஒப்பிடு

விபரம் சாதாரண நடவு முறை அடர் நடவு முறை
இடைவேளி 5 x 5 மீ 3 x 1.5 மீ
கன்றுகளின் எண்ணிக்கை/எக்டர் 400 2222
கவாத்து முறையாக பின்பற்றுவது கிடையாது ஒவ்வொரு பருவ வளர்ச்சியிலும் 50 சத தண்டுகளை கவாத்து செய்ய வேண்டும்.
அறுவடை காலம் இரண்டாம் ஆண்டில் இருந்து முதலாம் ஆண்டில் இருந்து
பயிர் மேலாண்மை பெரிய மரம் என்பதால் மிகவும் சிரமம் சிறிய மரம் என்பதனால் மிகவும் எளிது.
அறுவடை கடினம் எளிது
மகசூல் தோராயமாக 15–20 டன்/எக்டர் 50-60 டன்/எக்டர்
பழத்தின் தரம் குறைந்த சூரிய ஒளி உட்புகுவதால் அதிக சூரிய ஒளி உட்புகுவதனால்
குறைந்த தரம் கொண்ட பழங்கள் கிடைக்கும் நல்ல தரம் மிகுந்த பழங்கள் கிடைக்கும்

கட்டுரை : முனைவர் கோ. மாலதி, முனைவர் மா. விஜயகுமார், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் மாவட்டம்
தற்போதைய செய்திகள்