width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

மரவள்ளியும் மாவுப்பூச்சியும்




மரவள்ளி பயிரானது 17ம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு அறிமுகம் செய்யப்பட்டது.இதன் தாயகம் பிரேசில் ஆகும்.இந்தியாவில் குறிப்பாக தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, தெலுங்கான மற்றும் ஆந்திராவில் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது.

கேரளாவில் அதிக பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்பட்டலும் மரவள்ளி உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடம் வகிக்கிறது. தமிழகத்தில் சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விழுப்புரம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் அதிக பரப்பளவில் மரவள்ளி சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது அதிக வெப்பத்தின் காரணமாக மாவுப்பூச்சிகள் பெருகி மரவள்ளி பயிரில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகிறது. இதனால் 30 முதல் 40 சதம் வரை மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆதலால் மாவுப்பூச்சியின் சேத அறிகுறிகள் மற்றும் கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சேத அறிகுறிகள்:

மாவுப்பூச்சிகள் இளம் தளிர்,தண்டு மற்றும் இலைகளின் அடிப்பகுதியில் இருந்து சாற்றை உரிஞ்சுவதால் இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

பின்பு இலைகள் வளைந்தும்,நெளிந்தும் மற்றும் சிறுத்தும் காணப்படும்.

இப்பூச்சியானது நச்சுப்பொருட்களை உட்சொலுத்துவதல் நுனிக்குருத்தின் வளர்ச்சி குன்றியும்,உருமாற்றம் அடைந்து “முடிகொத்தாக”தோற்றமளிக்கும்.

இலைகளின் மேற்புறத்தில் தேன் போன்ற கழிவுகளும் அதன் மேல் கரும்பூசண வளர்ச்சி காணப்படும்.

பின்னர் இலைகளில் ஒளிசேர்க்கை நடைபெறாமல் இலைகள் வாடி காய்ந்து விடும்.

வாழ்க்கை சுழற்சி:

மாவுப்பூச்சிகள் பெரும்பாலும் இளம்சிவப்பு நிறம் முதல் மஞ்சள் நிறம் வரை காணப்படும்.

இப்பூச்சியானது 2.5 மி.மீ நீளமும்,1முதல் 4 மி.மீ அகலம் இருக்கும்.

ஒரு பெண்பூச்சியானது 500 முதல் 600 முட்டைகளை இடும்.

முட்டையில் இருந்து குஞ்சுகளாக வளர்ச்சி பெற 10 முதல் 15 நாட்கள் தேவைப்படுகிறது.

இவ்வாறு ஒரு வருடத்தில் 15 முறை இனப்பெருக்கம் செய்கிறது.

ஏற்ற காலநிலை:

அதிக வறட்சி மற்றும் மிக வெப்பமான கோடை காலங்களில் மாவுப்பூச்சிகளின் தாக்கம் அதிகம் இருக்கும்.

கட்டுப்படுத்தும் முறைகள்:

அதிகம் தாக்கப்பட்ட செடிகளை பிடுங்கி எரித்து விட வேண்டும்.

களைகள் இல்லாமல் வயல்களை சுத்தமாக பாதுகாக்க வேண்டும்.

வெப்பஎண்ணெய் கரைசல் 3 சதம் அல்லது வெப்பகொட்டை கரைசல் 5 சதம் தெளித்து பூச்சிகளை விரடலாம்.

கற்பூர கரைசல்- 15மி.லி/லிட்டர் அல்லது மீன்எண்ணெய் சோப்பு கரைசல்-40மி.லி/லிட்டர் என்ற அளவில் தெளித்து பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்.

கிரிப்டோபஸ் மான்செட்ரோசூரி என்ற பொறி வண்டை ஏக்கருக்கு 500 எண்ணிக்கையில் விடலாம் அல்லது அசிரோபோகஸ் பப்பையா என்ற ஓட்டுண்ணியை ஏக்கருக்கு 500 விடலாம்.

கரும்பூசண வளர்ச்சியை தடுக்க மைதா கரைசல் தெளிக்கலாம்.

பூச்சியின் தாக்கம் அதிகம் உள்ள சமயத்தில் தையோமித்தாக்சம் மற்றும் அசிபேட் பூச்சிக்கொல்லியை 3 கிராம்/லிட்டர் அல்லது புரோபனபாஸ் மற்றும் பூப்ரோபேசின் பூச்சிக்கொல்லியை 3 மி.லி /லிட்டர் என்ற அளவில் தண்ணீருடன் கலந்து தெளித்து பூச்சிகளை அழிக்கலாம் .
குறிப்பு : மைதா கரைசல் தயார் செய்தல்.

5 லிட்டர் தண்ணீரில் 1 கிலோ மைதாவை நன்றாக கலந்து கொதிக்க விட வேண்டும். பின்னர் 20 லிட்டராக மாற்றி தெளிக்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: இரா.ஜெயசங்கர்மூர்த்தி, (முதுகலை வேளாண்மை), கோழிப்பட்டு, விழுப்புரம் மாவட்டம்,  மின்னஞ்சல்: agrijay102@gmail.com




தற்போதைய செய்திகள்