width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

மல்லிகைப் பூ வகைப் பயிர்களில் செஞ்சிலந்தி மேலாண்மை




“உலகளவில் தனித்துவம் வாய்ந்தது மதுரை மல்லிகைப்பூ” என்பதை குறிக்கும் வகையில் மல்லிகை பூவிற்கு “புவிசார் குறியீடு” கிடைத்துள்ளது. தமிழகத்தில் மல்லிகை பூவானது மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் அதிக பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு கர்நாடக, கேரளா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மல்லிகை பயிரில் செஞ்சிலந்தியின் சேதம் அதிகம் தென்படுகிறது. இதனால் பெரும் மகசூல் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆதலால் செஞ்சிலந்தியின் சேத அறிகுறிகள் மற்றும் மேலாண்மை முறைகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

சேத அறிகுறிகள் :

செஞ்சிலந்திகள் முதலில் முதிர்ந்த இலைகளை தாக்குகிறது. பின்னர் துளிர் இலைகள் மற்றும் நுனித்தண்டுகளை தாக்கி பெரும் சேதத்தை ஏற்படுகிறது.

இலைகளில் வெண் மஞ்சள் பகுதிகள் தோன்றி பின்பு வெளுத்து காய்ந்து விடும்.

தாக்கப்பட்ட இலைகளை உற்றுநோக்கினால் நுலாம்படையும் அதனுள் சிவப்பு நிறமுடைய சிறு பூச்சிகள் நகர்ந்து செல்வதை காணலாம்.

வாழ்க்கை சுழற்சி :

இச்சிலந்திகள் கண்ணுக்கு தெரியாத மிகச்சிரியதாக இருக்கும்.

இவை வெள்ளை நிற புழுக்கள் போன்று இரண்டு ஜோடி கால்களை கொண்டிருக்கும்.

பெண் சிலந்திகள் இலையின் அடிப்பகுதியில் கோள வடிவில் வெண்ணிற முட்டைகளை இடும்.

முட்டையில் இருந்து இளம்பூச்சிகள் வெளி வந்து இரண்டு அல்லது மூன்று முறை தோலுரித்து வளர்ந்த பூச்சியாக உருமாற்றம் அடையும்.

ஏற்ற காலநிலை :

மழையற்ற, மிக வறண்ட சூழ்நிலை செஞ்சிலந்திக்கு ஏற்ற காலநிலையாகும்.

மேலாண்மை முறைகள் :

தாக்கப்பட்ட பாகங்கள் மற்றும் பூச்சிகளை சேகரித்து அழிக்க வேண்டும்.

வேப்பஎண்ணெய் கரைசல் 3 சதம் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 5 சதம் உடன் டீபால் அல்லது காதி சோப்பு சேர்ந்து தெளித்து பூச்சிகளை விரட்டலாம்.

1 லிட்டர் தண்ணீரில் 0.5 மி.லி புரோபர்கைட் அல்லது 2மி.லி டைக்கோபால் அல்லது 2 கிராம் நனையும் கந்தகம் கலந்து தெளித்து சிலந்திகளை கட்டுப்படுத்தலாம். (பூச்சியின் தாக்கம் அதிகம் இருக்கும் பட்சத்தில் 15 நாட்கள் கழித்து ஒரு முறை மீண்டும் தெளிக்க வேண்டும்).

குறிப்பு : வேப்பங்கொட்டை கரைசல் (5 சதம்) தயார் செய்தல்.

5 கிலோ வேப்பங்கொட்டைகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

நன்றாக பவுடராகும் வரை வேப்பங்கொட்டைகளை அரைத்துக்கொள்ளவேண்டும்.

இரவு முழுவதும் அரைத்த கொட்டைகளை பத்து லிட்டர் தண்ணீரில் ஊறவைக்க வேண்டும்.

இரண்டு அடுக்கு மெல்லிய நாட்டு துணியைக் கொண்டு கரைசலை வடிகட்டி அதன் அளவை நூறு லிட்டராக மாற்ற வேண்டும்.

இதனுடன் 1 சதவிகிதம் காதி சோப்பு சேர்க்க வேண்டும் (முதலில் சோப்பை ஒரு பசையைப் போலாக்கி பின்பு கரைசலுடன் கலக்க வேண்டும்).

பின்பு கரைசலை நன்கு கலக்கிவிட்டு உபயோகிக்க வேண்டும்.

தகவல் : இரா.ஜெயசங்கர்மூர்த்தி, (முதுகலை வேளாண்மை), கோழிப்பட்டு, விழுப்புரம் மாவட்டம், கைபேசி: 8940 475344, மின்னஞ்சல்: agrijay102@gmail.com. இரா.வெங்கடேஷ், (இளங்கலை வேளாண்மை), பொற்படாக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம், கைபேசி: 86673 39761, மின்னஞ்சல்: agrivenkatesh20@gmail.com.

 

Credit :அக்ரி-டாக்டர்- EPAPER




தற்போதைய செய்திகள்