width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

ரப்பர் மரங்களில் ஏற்படும் இலை உதிர்தல் நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி?
தாவர நோயியல் ஆய்வாளர்களின் விளக்கம்குமரி மாவட்டத்தில் ரப்பர் மரங்களில் ஏற்படும் இலை உதிர்தல் நோயைக் கட்டுப்படுத்தும் வழி முறைகள் குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழக தாவர நோயியல் துறை முனைவர் பட்டப் படிப்பு மாணவர் கு.விக்னேஷ் மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர் த.சுதின் ராஜ் விளக்கம் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ளச் செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது,

நோய்க் காரணி
இந்நோய் ஃபைடோப்தோரா பால்மிவோரா என்ற பூசணத்தால் தோற்றுவிக்கப்படுகிறது. இதன் பூசண இழைகள் குறுக்குச் சுவர்கள் இல்லாமலும், நிற மற்றும் திசுவறைகளுக்கு இடையேயும் காணப்படும். இழைகளிலிருந்து தோன்றும் உறிஞ்சும் உறுப்புகள் திசுவறைகளுக்குட் சென்று பூசணத்திற்கு வேண்டிய உணவுப் பொருட்களைக் கிரகித்துக் கொள்ளும். பூசண இழைகள் நன்குக் கிளைத்துப் படர்ந்து வளர்ந்து நோய்த் தாக்கப்பட்ட பகுதிகளின் மேற்பரப்பில் மெல்லிய பஞ்சு இழைகள் போல் வளர்ந்திருக்கும்.

ரப்பரில் இலை உதிர்தல் நோய்

குமரி மாவட்டத்தில் ரப்பர் மரம் வளர்ப்பு ஒரு பிரதானத் தொழிலாகும். இங்குள்ள ரப்பர் மரங்களில் ஏற்படும் நோய்களில் மிக முக்கியமானது இலை உதிர்தல் நோயாகும். இந்நோயின் முக்கிய அறிகுறி இலைகள் பெருமளவில் அகாலமாக உதிர்தலாகும். இலைகளில் முதலில் சிறிய வட்ட வடிவ சாம்பல் நிறப்புள்ளிகள் தோன்றும். புள்ளிகள் சில தினங்களில் விரிவடைந்து, ஒழுங்கற்றப் புள்ளிகளாக மாறும். பலப்புள்ளிகள் ஒன்றாக இணைந்து இலைகளில்பெரியப் பட்டைகளைத் தோற்றுவிப்பதோடு மட்டுமல்லாமல், இலைக் காம்பிலும் பரவும். நோய்த் தாக்கப்பட்ட இலைகள் விரைவில் உதிர்ந்து விடும். மேலும் நோய்த் தாக்கப்பட்ட இலைகளிலிருந்து அழுகிய துர்நாற்றம் வீசக்கூடும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது இளம் கிளைகளும் தாக்கப்படும். இவ்வாறு நோய்த் தாக்கக்பட்ட ரப்பர் தோட்டங்களின் நிலப்பரப்பில் உதிர்ந்த இலைகள் சிவப்புக் கம்பளம் விரித்தாற்ப் போன்றத் தோற்றத்தை ஏற்படுத்தும். இந்நோய் ரப்பர் மரங்களில் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதக் காலங்களில் அதி தீவிரமாக இருக்கும். இதனால் ரப்பர் மரங்களிலிருந்துப் பெறப்படும் ரப்பர் பாலின் அளவும், தரமும் பாதிக்கப்பட்டுப் பெருமளவு இழப்பு ஏற்படுகிறது.

நோய்ப் பரவும் விதமும் பரவுவதற்கு ஏற்ற காலநிலைகளும்

நோயின் தீவிரம் அதிகமாவதற்கு அதிக ஈரப்பதமும் அதிக நீரும் அவசியம். காற்றில் ஈரப்பதம் 80 சதவீதத்திற்கு அதிகமாகவும், வெப்பநிலை 28.90 செ-ம், நாளொன்றுக்கு குறைந்தது 2.5 மி.மீ மழைப்பொழிவும், சூரிய வெளிச்சம் 3 மணி நேரத்திற்கும் குறைவாக இருக்கும் போது இந்நோய் எளிதில் ரப்பர் மரங்களைத் தாக்கக்கூடும். நோய்க்காரணி பட்டைகளின் அடிப்புறத்திலும் மண்ணிலும் நீண்ட காலம் தங்கியிருந்து, மழைக் காலம் வந்ததும் ரப்பர் மரங்களில் நோயை உண்டாக்கும். பூசணம் தோற்றுவிக்கும் பூசண இழைகளும், பாலினக் கலவையினால் தோற்றுவிக்கும் ஊஸ்போர் வித்து உறுப்புக்களும், நோய்ப் புதிதாகத் தோன்றக் காரணமாகின்றன. காற்று, மழைச்சாரல், பூச்சிகள் போன்றவற்றால் ஸ்போரான்ஜியா வித்துப்பைகள் ஒரு மரத்திலிருந்து வேறு மரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, இரண்டாம் பட்சமாக நோய்ப் பரவுகிறது.

மேலாண்மை முறைகள்
எனவே இந்நோய்த் தாக்குதலிலிருந்து ரப்பர் மரங்களைக் காப்பற்றுவதற்கு, நோய் வருவதற்கு முன்னரே மருந்துத் தெளிக்கலாம். போர்டோக் கலவை 1 சதம் அல்லது தாமிர ஆக்ஸிக் குளோரைட் பூசணக் கொல்லி மருந்தை, தென் மேற்கு பருவ மழை ஆரம்பிக்கும் முன்னர் ஒரு முறையும், பருவ மழை ஆரம்பித்தப் பின்னர் புதிதாக தழைகள் தொடரும் போது மறுபடியும் தெளிப்பதன் மூலம் நோய் வராமல் கட்டுப்படுத்தலாம். தோட்டத்தில் விழுந்துள்ள நோய்த் தாக்கப்பட்ட இலைகளை அவ்வப்போது அகற்றி விட வேண்டும். மேலும் PB 217, GT 1, RR II – 105 போன்ற நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட இரகங்களை பயன்படுத்தலாம். ரப்பர் அதிகளவில் பயிரிடப்படும் பகுதிகளில் ஆகாய விமானம் மூலம் மருந்துத் தெளிக்கப்படுகிறது. இதற்கு ஃபைக்கால் என்ற பூசணக் கொல்லியை ஏக்கருக்கு 2 லிட்டர் வீதம் சோயா எண்ணையுடன் கலந்துத் தெளிக்கப்படுகிறது.

இந்த மேலாண்மை முறைகளைப் பயன்படுத்தி ரப்பர் மரங்களில் ஏற்படும் இலை உதிர்தல் நோயைக் கட்டுப்படுத்தலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய செய்திகள்