width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

செடிகளில் காயும் பூக்கள் விவசாயிகள் வேதனை




கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கொரோனா பொது முடக்கம் காரணமாக பூக்கள் பறிக்காமல் செடிகளில் காய்ந்து வருகிறது. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.

மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, சூளகிரி சுற்று வட்டார பகுதிகளில், 1,500 ஏக்கரில் பசுமை குடில்கள் அமைத்து, ரோஜா, கிர சாந்திமம், ஜெர்புரா, கார்னேசன் போன்ற அலங்கார கொய் மலர்களும், திறந்த வெளியில், 5,000 ஏக்கரில் செண்டு மல்லி, சாமந்தி, பட்டன் ரோஜா போன்ற பல்வேறு மலர்களும் சாகுபடி செய்யப்படுகின்றன.

கடந்த ஆண்டு கொரோனா முடக்கத்தால், மார்ச் முதல் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. அதனால், பூக்களை சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் நஷ்டத்திற்கு ஆளாகினர். வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கும் பூக்கள் அனுப்ப முடியாமல் போனது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், மார்க்கெட்டுகள் திறக்கப்பட்டு பூக்கள் விற்பனை தொடங்கியது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்பில் இருந்து, விவசாயிகள் மீண்டு வரும் நிலையில், கொரோனா 2-ம் அலை காரணமாக, ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதனால், சாகுபடி செய்த பூக்களை விற்பனை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். பூக்களை சந்தைப்படுத்த முடியாமல், செடிகளில் இருந்து பறிக்காமல் விட்டுள்ளனர். சிலர் செடிகளை காப்பாற்ற, பூக்களை பறித்து சாலையோரம் கொட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் : கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் விவசாயிகளுக்கு மட்டும், ரூ.350 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டது. தற்போதும் பூக்களை பறித்து விற்பனை செய்ய முடியவில்லை. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை தான் சுப நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்கும். இந்நிலையில், தற்போது மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பூக்கள் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. பசுமை குடில்களில் உள்ள செடிகளை பராமரிப்பு செய்யாவிட்டால் வீணாகி விடும். அதனால், அவற்றை பாதுகாக்க மாதந்தோறும் ரூபாய் ஒரு லட்சம், திறந்த வெளி செடிகளை காக்க, ரூ.30,000ம் செலவு செய்து வருகிறோம். ஆனால், ஒரு ரூபாய் கூட வருமானம் இல்லை. கடன் வாங்கி செடிகளை பராமரிக்கிறோம். கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தையே ஈடுகட்ட முடியவில்லை. நடப்பாண்டும் பூக்கள் வீணாகி வருவதால் வேதனையில் உள்ளதாக கூறினர்.




தற்போதைய செய்திகள்