width:779px height:533px மேலாண்மை செய்திகள்

தினை சாகுபடி தொழில்நுட்பம்




தினை சாகுபடி சிறுதானிய வகைகளில் ஒன்றான தினை பயிரிட்டால் அதிக அளவில் லாபம் கிடைக்கும். பொதுவாக, தினை கடுமையான வறட்சியையும் தாங்கி வளரக் கூடியது. ஆடி, புரட்டாசிப் பட்டம் இந்தப் பயிருக்கு ஏற்றதாகும். மனிதன் 40 வயது முதல் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகிவருவதால், சிறுதானியங்களை உண்பது அதிகரித்து வருகிறது.
மக்கள் அதிகம் பயன்படுத்தும் பொருளாக தினை உள்ளதால், சந்தையில் எப்போதும் விற்பனை வாய்ப்பு அதிகம் இருக்கும்.


"லவ் பேட்ஸ்' எனப்படும் காதல் பறவைகளுக்கும் மிகவும் பிடித்தமான தீனி தினையாகும். தற்போது கடைகளில் ஒரு கிலோ தினை ரூ. 80 முதல் ரூ. 90 வரை விற்கப்படுகிறது.

 

தினை சாகுபடிக்கு ஏற்ற நிலம்

  • செம்மண், இருமண் கலந்த மண் சிறந்தது. கோடை மழையை பயன்படுத்தி பயிர் அறுவடைக்குப் பின்பு நிலத்தை சட்டிக் கலப்பையைக் கொண்டு ஆழமாக உழவு செய்ய வேண்டும். கோடை உழவால் மண் அரிமானம் தடுக்கப்பட்டு, மழைநீர் சேமிக்கப்படுவதுடன் கோடை மழையில் முளைக்கும் களைகள் கட்டுப்படுத்தப்படும்.
  • நிலத்தடியில் இருக்கும் கூட்டுப் புழுக்கள் உழவின்போது மேலே கொண்டு வரப்பட்டு அழிக்கப்படுவதால் பயிர்க் காலத்தில் பூச்சிகளின் தாக்குதல் குறையும்.

விதை அளவு

தினை விதையை வரிசையாக விதைத்தால் ஒரு ஹெக்டேருக்கு 10 கிலோ தேவைப்படும். விதையைத் தூவினால் ஒரு ஹெக்டேருக்கு 12.5 கிலோ தேவைப்படும்.

இடைவெளி

வரிசைக்கு வரிசை 25 செ.மீட்டரும், செடிக்குச் செடி 10 செ.மீட்டரும் இருக்க வேண்டும்.

விதை விதைப்பு

கை விதைப்பு அல்லது விதைப்பான் கருவி கொண்டு வரிசையாக விதைப்பு செய்யலாம். இப்படிச் செய்வதால் அதிக பரப்பில் மண் ஈரம் காயும் முன்பே விதைத்து முடிக்கலாம்.

விதை நேர்த்தி

ஒரு ஹெக்டேருக்கு தேவையான விதையளவுக்கு 600 கிராம் அசோபாசை அரிசிக் கஞ்சியுடன் கலந்து நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். நிலத்தில் இடுவதாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ அசோபாசை 25 கிலோ மணல், 25 கிலோ தொழுஉரம் கலந்து தூவ வேண்டும்.

உரமிடுதல்

  • ஒரு ஹெக்டேர் நிலத்தில் அடியுரமாக 12.5 டன் மக்கிய தொழு உரத்தை கடைசி உழவின்போது பரப்பி பிறகு நிலத்தை உழ வேண்டும். பின்னர் 20 கிலோ தழைச் சத்து, 20 கிலோ மணிச் சத்து ஆகியவற்றை விதைப்பின்போது அடியுரமாக இட வேண்டும்.
  • மேலுரமான 20 கிலோ தழைச்சத்தை விதைத்த 20-25 நாள்கள் கழித்து கிடைக்கும் ஈரத்தை பயன்படுத்தி இட வேண்டும்.

களை நிர்வாகம்

விதைத்த 18 முதல் 20-ஆம் நாளில் களை எடுத்தல் அவசியம். பின்னர் 40-ஆம் நாளில் தேவைப்பட்டால் இன்னொரு முறையும் களை எடுக்கலாம்.

பயிர் களைதல்

விதைத்த 18 முதல் 20 -ஆம் நாளில் செடிகளைக் களைத்து தேவையான பயிர் எண்ணிக்கையை பராமரிக்க வேண்டும்.

 

பயிர் பாதுகாப்பு

இந்தப் பயிரை பொதுவாக பூச்சிகள். நோய்கள் தாக்குவதில்லை. ஆதலால், பயிர் பாதுகாப்பு அவசியமில்லை. உயர் விளைச்சலைத் தரக்கூடிய ரகத்தை பயன்படுத்தும்போது நல்ல விளைச்சலைப் பெறலாம்.

 

அறுவடையும், விளைச்சலும்

  • கதிர்கள் நன்கு காய்ந்து இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்து களத்தில் காயவைத்து அடித்து தானியங்களை பிரித்து சுத்தம் செய்ய வேண்டும்.
  • தோராயமாக ஒரு ஹெக்டேருக்கு 1,850 கிலோ தானிய விளைச்சலையும், 5,500 கிலோ தட்டை விளைச்சலையும் பெறலாம். இவ்வாறு கிடைக்கும் தானியத்தை சாக்குப் பையில் போட்டு போத்து நீண்ட காலம் பாதுகாக்க முடியும்.

 

மதிப்பூட்டப்பட்ட பொருள்கள்

  • தினையில் இருந்து அவல், உப்புமா, தோசை, புட்டு, முறுக்கு, பக்கோடா உள்ளிட்ட சுவையான உணவையும் தயாரிக்க முடியும்.

 




தற்போதைய செய்திகள்