width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

மண்வளம் காக்க பசுந்தாள் உரப்பயிர் சாகுபடி வேளாண்மை உதவி இயக்குநர் தகவல்




மண்வளத்தினை அதிகரித்து பயிர்களின் மகசூலை அதிகரிக்க பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் என புதுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் செல்வி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது : விவசாயப் பெருமக்கள் கோடை காலத்தில் பெறக்கூடிய மழை மற்றும் நீர்பாசன ஆதாரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி பசுந்தாள் உரப்பயிர்களை பயிரிடுவதன் மூலம் அடுத்து சாகுபடி செய்ய உள்ள பயிர்களுக்கு தேவையான இயற்கை உரங்களை எளிதில் அளிப்பதுடன் மண் வளத்தினையும் பாதுகாக்கலாம்.

தற்பொழுது பயிர் அறுவடை மேற்கொண்டு தரிசாக உள்ள நிலங்களில் பசுந்தாள் உரப்பயிர்களான சணப்பை மற்றும் தக்கைபூண்டு ஆகியவற்றை ஏக்கருக்கு 20 கிலோ என்ற அளவில் விதைத்து பூப்பூக்கும் தருணத்தில் மடக்கி உழவேண்டும். இவ்வாறு செய்வதனால் மண்வளம் மேம்படுத்தப்படுகின்றது.

மேலும் பயிர் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச் சத்துகளை அளித்து பயிர் சாகுபடியில் பல்வேறு நன்மைகளையும் விளைவிக்கின்றது.

மண்ணின் அங்ககப்பொருட்களின் அளவே மண்ணின் வளத்தினை நிர்ணயிக்கின்றது. அந்த வகையில் பசுந்தாள் உரப்பயிர்களை மண்ணில் மடக்கி உழும்போது அவை மண்ணில் உள்ள கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களின் தாக்குதலுக்கு உட்பட்டு ஹுமஸ் எனப்படும் மக்குப்பொருள் மற்றும் இதர அங்ககப் பொருட்களை தருகின்றது.

இது மண்ணில் உயிரோட்டத்தை ஏற்படுத்தி மண்ணின் நீர் பிடிப்புத் தன்மையை அதிகரித்து, பயிர்களை வறட்சியிலிருந்து பாதுகாக்கின்றது.

பசுந்தாள் உரப்பயிர்கள் ரைசோபியம் என்ற பாக்டீரியாவின் உதவியுடன் காற்றிலுள்ள தழைச்சத்தினை வேர் மற்றும் தண்டு முடிச்சுகள் மூலம் சேமிக்கின்றது. அவற்றை மண்ணுக்குள் மடக்கி உழுவதனால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரித்து, அவற்றிலிருந்து பலவிதமான அங்கக அமிலங்கள், வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் நொதிப்பொருட்கள் வெளிப்படுகின்றன.

இந்த அங்கக அமிலங்கள் மண்ணில் கரையாத நிலையிலிருக்கும் ஊட்டச்சத்துக்களை குறிப்பாக மணிச்சத்தை கரைத்து பயிருக்கு கொடுக்கின்றது. இதனால் பயிருக்கு கிடைக்கக் கூடிய ஊட்டச்சத்துகளின் அளவு அதிகரிக்கின்றது.

பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்வதனால் மண்ணின் மேற்பரப்பை காற்று மற்றும் நீர் அரிமானத்திலிருந்து காக்கின்றது. மேலும் மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் தண்ணீரில் அடித்து செல்லாமல் பாதுகாக்கின்றது.

மேலும் மண்ணின் இறுக்கமாவது தடுக்கப்பட்டு மண்ணின் கட்டமைப்பை மேம்படுத்துகின்றது. பசுந்தாள் உரங்கள் மணற்பாங்கான நிலங்களில் மண்ணின் நீர் பிடிப்புத் தன்மையை அதிகரிக்கின்றது. களிப்பாங்கான நிலங்களில் காற்றோட்டத்தை ஏற்படுத்தி நல்ல வடிகால் வசதியினையும் ஏற்படுத்தி தருகின்றது.

தக்கைப்பூண்டு பசுந்தாள் உரப்பயிராக மட்டுமல்லாமல் இயற்கை முறையில் களர் மற்றும் உவர் நிலங்களை சீர்திருத்தம் செய்யவும் உதவுகின்றது.

கோடை காலங்களில் பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்யும் போது மண் போர்வையாக செயல்பட்டு மண்ணிலுள்ள நீர் ஆவியாவதை தடுக்கின்றது. அதன் விளைவாக மண்ணின் ஆழமான பகுதிகளில் காணப்படும் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்ககூடிய உப்புகள் தரைமட்டத்திற்கு கொண்டுவராமல் தடுக்கப்படுகின்றது. இதன் வாயிலாக உவர் மண் உருவாவது தடுக்கப்படுகின்றது.

பயிர்ச் சுழற்சி முறையில் பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்வதனால் வழக்கமாக பயிர்களை தாக்கும் பூச்சி மற்றும் நோய்களிலிருந்து பயிர்களை பாதுகாக்கலாம். பசுந்தாள் உரப்பயிர்கள் மண்ணில் இராசயணப் பொருட்களை உற்பத்தி செய்வதனால் மண்ணின் மூலம் பரவக்கூடிய நோய்க் கிருமிகள் மற்றும் நூற்புழுக்கள் அழிகின்றன.

பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்வதனால் அடுத்த சாகுபடிக்கு பயிர்களுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அளிப்பதன் வாயிலாக உரச் செலவு சேமிக்கப்படுகின்றது. மேலும் பசுந்தாள் உரப்பயிர்களை மண்ணில் மக்கச் செய்வதனால் களைச்செடி விதைகளின் முளைப்புத் திறன் பாதிக்கப்பட்டு களைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன. இதன் விளைவாக பயிர்களின் உற்பத்திச் செலவு குறைந்து, வருமானம் அதிகரிக்கின்றது.

எனவே, புதுக்கோட்டை வட்டார விவசாயிகள் பல்வேறு நன்மைகள் தரக்கூடிய பசுந்தாள் உரப்பயிர்களை சாகுபடி செய்து மண்ணில் மடக்கி உழவு செய்து பின் பயிர் சாகுபடி செய்வதன் மூலம் மண்வளத்தினை அதிகரித்து, பயிர்களில் அதிக விளைச்சலைப் பெற முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.




தற்போதைய செய்திகள்