width:px height:px மேலாண்மை செய்திகள்

தென்னையில் குருத்தழுகல் நோயை கட்டுப்படுத்தும் முறைகள்




தற்போது பெய்து வரும் பருவமழைக்கு விவசாயிகள் தென்னை நடவு செய்து வரும் நிலையில், தென்னையில் முதிர்ந்த மரங்கள் மட்டுமின்றி இளம் கன்றுகளையும் பல நோய்கள் தாக்குகின்றன. குறிப்பாக பருவமழை காலத்தில் வெப்பநிலை குறைவாகவும் ஈரப்பதம் மிக அதிகமாகவும் இருக்கும். இதனால் இளம் கன்றுகள் மட்டுமின்றி பெரிய மரங்களும் குருத்தழுகல் நோயால் பாதிப்படையக்கூடும்.

குருத்தழுகல் நோயின் தாக்குதல் அறிகுறிகள்

தென்னை இளங்கன்றுகளில் குருத்தழுகல் நோய் தாக்கப்பட்ட குருத்துகள் பழுப்பு நிறமாக மாறி மெதுவாக இழுத்தாலே கையோடு வந்துவிடும். இலையின் அடித்திசுக்கள் விரைவில் அழுகி, உச்சியிலிருந்து இழுத்தால் எளிதில் பெயர்ந்து வந்துவிடும். நோய் முற்றிய நிலையில் குருத்துக்கள் வாடி, உதிர்ந்து விடக்கக்கூடும். உச்சியில் உள்ள இளம் இலைகளின் அடிப்பகுதி மற்றும் உச்சியில் உள்ள மென்மையான திசுக்கள் அழுகி வழவழப்பாக மாறி துர்நாற்றம் வீச துவங்கும். முடிவில் உச்சிப் பகுதி அடியோடு சாய்ந்து, மரம் மடிந்து விடும். பெரிய மரங்களில், குருத்துகள் பழுப்பு நிறமாகி, அடிப்பகுதி பலமிலந்து தொங்கிவிடும். அழுகல் மெதுவாக கீழ்நோக்கி பரவி இறுதியில் நுனிப்பகுதியை பாதித்து மரத்தையும் அழித்து விடும். இதையடுத்து சுற்றியுள்ள இலைகள் தொங்கிவிடும். இருந்தாலும் மரத்தில் எஞ்சியிருக்கும் காய்கள் முதிர்ச்சியடையலாம்.

வெளிறிய இலை
மஞ்சள் இலைகள்
இளம் செடிகள் மஞ்சளாக
உச்சிப் பகுதி காய்தல்

கட்டுப்படுத்தும் முறைகள்
போதுமான வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
நோய் தாக்கப்பட்ட கொண்டை பகுதியை அகற்றிவிட்டு, புதிய குருத்து வரும் வரை போர்டோ பசை தடவி மழை நீர் படாதவாறு பாதுகாக்க வேண்டும். (1 லி போர்டோ பசை தயாரிக்க 100 கி காப்பர்சல்பேட் மற்றும் 100 கி நீர்த்த சுண்ணாம்பை தனித்தனியே 500 மில்லி தண்ணீரில் கரைத்து, இரண்டையும் ஒன்றாக கலக்க வேண்டும்).
தடுப்பு நடவடிக்கையாக பருவமழை தொடங்குவதற்கு முன் 1% போர்டோ கலவை அல்லது 0.25% காப்பர் ஆக்ஸிகுளோரைடை நோய் பாதித்த மரத்திற்கு அருகில் உள்ள மரத்தின் கொண்டையில் தெளிக்க வேண்டும். நோய் தாக்கப்பட்ட மற்றும் அருகில் உள்ள மரங்களின் மீது தடுப்பு நடவடிக்கையாக தெளிக்கலாம்.
பருவமழைக்கு பின் 0.25 % காப்பர் ஆக்ஸி குளோரைடை தெளிக்கலாம்.

தகவல் : செ.சுகன்யா கண்ணா, மா.விஜயகுமார் மற்றும் ம.மலர்கொடி, சேலம் மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), வேளாண் அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம்.




தற்போதைய செய்திகள்