width:px height:px மேலாண்மை செய்திகள்

கத்தரியில் காய்ப்புழுவா? கவலை வேண்டாம்




அதிகமாக பூச்சிக்கொல்லி உபயோகப்படுத்தப்படும் காய்கறிப் பயிர்களில் கத்தரியும் ஒன்று. குருத்து மற்றும் காய்த்துளைப்பான், தண்டு துளைப்பான், எபிலாக்னா வண்டு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் கத்தரியைத் தாக்கி மிகுந்த சேதம் உண்டாக்குகின்றன. அவற்றுள் குருத்து மற்றும் காய்த்துளைப்பான் மிக முக்கியமானது ஆகும்.

தாக்குதல் அறிகுறிகள்
கத்தரியில் குருத்து மற்றும் காய்த்துளைப்பானின் தாக்குதல் வளர்ச்சிப் பருவம் மற்றும் காய் பிடிக்கும் தருணத்தில் காணப்படும். இளம் சிவப்பு நிறமுடைய புழுக்கள் கத்தரிச் செடியின் இளம் குருத்து பகுதியை துளைத்து சேதம் உண்டாக்கும். இதனால் துளைக்கப்பட்ட பகுதிக்கு மேலுள்ள இளங்குருத்துப் பகுதி வாடி, வதங்கி தொங்கிவிடும். மேலும் அப்பகுதியில் உள்ள பூ மொட்டுக்கள், பூக்கள் மற்றும் இளம் பிஞ்சுகளும் செடியிலிருந்து உதிர்ந்துவிடும். புழு தண்டைக் குடைந்த பகுதியில் சிறு ஓட்டையையும் காணலாம். காய் பிடிக்கும் பருவத்தில், இப்புழுக்கள் காயை குடைந்து உள்ளே சென்று உட்பகுதியைத் தின்று சேதப்படுத்தும். இதனால் காயின் மேல் சிறு துவாரம் இருப்பதை காணலாம். காய்கள் அளவில் பெருக்கும்போது இத்துளைகள் பெரிதாகி அவை புழுக்களின் எச்சத்தால் அடைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு துவாரங்கள் உள்ள கத்தரிக்காய்களுக்கு சந்தையில் நல்ல விலை கிடைக்காது மற்றும் அதிக மகசூல் இழப்பும் ஏற்படும்.

வாழ்க்கை சுழற்சி
தாய் பூச்சியானது 150-350 முட்டைகள் வரை தனித்தனியாக இலைகள், குருத்து, பூக்கள் மற்றும் காய்கள் மேல் இடும். முட்டை பொறிக்கும் காலம் 3-5 நாட்கள் ஆகும். முழு வளர்ச்சியடைந்த புழுக்கள் இளஞ்சிவப்பு நிறமாக, பழுப்பு நிற தலையுடன் இருக்கும். புழுக்களின் வாழ்வு காலம் 10 முதல் 15 நாட்கள் ஆகும். கூட்டுப்புழுக்கள் சாம்பல் நிறத்தில் படகு வடிவத்தில் பட்டுக்கூடு போல் இருக்கும். கூட்டுப்புழுவிலிருந்து முழு வளர்ச்சியடைந்த தாய்ப் பூச்சி 6-8 நாட்களில் வெளிவரும். தாய்ப்பூச்சியின் முன் இறக்கைகளில் சிவப்பு நிற கோடுகள் காணப்படும். பின் இறக்கைகளில், கருப்பு நிற புள்ளிகள் காணப்படும்.

நிர்வாக முறைகள்
புழுக்களால் தாக்கப்பட்ட இளங்குருத்துப் பகுதிகள் மற்றும் காய்களை சேகரித்து அழிக்க வேண்டும்.
ஒரே நிலத்தில் தொடர்ச்சியாக கத்தரி பயிரிடுவதை தவிர்க்கவும்.
குருத்து மற்றும் காய்த்துளைப்பானின் அந்துப் பூச்சிகளை கவர்ந்து இழுக்க விளக்கு பொறி ஏக்கருக்கு ஒன்று என்ற வீதத்தில் வைக்கவேண்டும்.


ஆண் அத்துப்பூச்சியை கவர்ந்து அழிக்க ஏக்கருக்கு 5 என்ற அளவில் இனக்கவர்ச்சிப் பொறி வைக்க வேண்டும்.
ஐந்து சதம் வேப்பங்கொட்டை கரைசல் தெளிக்கலாம்.


நடவு செய்த ஒரு மாதம் பின்பு கீழ்க்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றை தெளித்து கத்தரி குருத்து மற்றும் காய்த்துளைப்பானைக் கட்டுப்படுத்தலாம்.


ஏக்கருக்கு எமாமெக்டின் பென்சோயேட் 5% எஸ். ஜி. 80 கிராம் அல்லது புளூபென்டன்மைடு 20 டபிள்யூ. டி.ஜி 150 கிராம் அல்லது குயினால்பாஸ் 20% எ. எஃப். 340 மில்லி அல்லது தயோடி கார்ப் 75% டபிள்யூ. பி. 400 கிராம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை 200 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும்.




தற்போதைய செய்திகள்