width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

நிலக்கடலைப் பயிரில் சுருள் பூச்சிகட்டுப்பாடு




புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகள் நிலக்கடலை பயிரினை தாக்கும் சுருள் பூச்சிகளை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடலாம் என மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

தற்போது புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலை பயிரினை தாக்கும் சுருள் பூச்சிகளை உரிய பாதுகாப்பு முறையினை கடைபிடித்து ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்திடலாம்.

தாக்குதல் அறிகுறிகள்

சுருள் பூச்சியின் புழுக்கள் இலைகளைத் துளைத்து உண்ணும். இப்புழுக்கள் தொடக்கத்தில் நடுநரம்பில் துளையிட்டு அதனுள் இருக்கும், பின்பு வளர்ந்த புழுக்கள் இலைகளைச் சுருட்டி அதனுள் இருந்து கொண்டு பச்சையத்தைச் சுரண்டிச் சேதம் விளைவிக்கும். தீவிரத் தாக்குதலுக்குண்டான செடிகள் காய்ந்தும் சுருங்கியும் காணப்படும். இதனால் பாதிக்கப்பட்ட வயலைத் தொலைவிலிருந்து பார்த்தால் எரிந்து காய்ந்தது போல் காணப்படும்.

சுருள் பூச்சி மேலாண்மை முறைகள்

ஊடுபயிராகத் தட்டைப்பயறு அல்லது உளுந்துப் பயிரை நிலக்கடலையுடன் முறையே 1:4 எனும் விகிதத்தில் விதைக்க வேண்டும். ஏக்கர் ஒன்றுக்கு விளக்குப்பொறி 5 எண்கள் வீதம் மாலை 7 மணி முதல் இரவு 11 மணி வரை வைத்துத் தாய் அந்துப் பூச்சிகளைக் கவர்ந்தழிக்கலாம். டிரைக்கோகிரம்மா கைலோனிஸ் என்கிற முட்டை ஒட்டுண்ணியை ஏக்கர் ஒன்றுக்கு 20,000 எனும் அளவில் 7 முதல் 10 நாட்கள் இடைவெளியில் இரு முறை வெளியிட்டு கட்டுப்படுத்திடலாம். செடி ஒன்றுக்கு 2 முதல் 3 புழுக்களுக்கு மேல் தென்பட்டால் அதாவது பொருளாதார சேத நிலையினை தாண்டும் பொழுது, மிடாகுளோபிரிடு 17.8 SL – 80 மி.லி. அல்லது ஸ்பினோசாடு 45 SC – 80 மி.லி அல்லது குளோர்பைரிபாஸ் 20 EC – 500 மி.லி. இவற்றில் ஏதேனும் ஒன்றை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம்.

உழவன் செயலி

மேலும் விவசாயிகள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்ட உழவன் செயலியல் பூச்சி நோய் கண்காணிப்பு என்ற பகுதியில் பயிர் பாதிப்பினை புகைப்படம் எடுத்து அனுப்பினால் விவசாயிகளுக்கு பயிர் பாதுகாப்பு மேலாண்மை முறைகள் விவசாயியின் அலைபேசிக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைக்கப்படும். விவசாயிகள் இந்த வாய்ப்பினையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நிலக்கடலை சாகுபடி மேற்கொள்ளும் பொழுது, சுருள் பூச்சியினை கட்டுப்படுத்திட ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு அதிக மகசூல் பெற்று பயன் பெறுமாறு புதுக்கோட்டை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் இராம. சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.




தற்போதைய செய்திகள்