width:1200px height:628px செய்திகள்

சாத்துக்குடி, ஆரஞ்சு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்




திருப்பூர் மாவட்டம், உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டாரங்களில் அதிகளவில் காய்கறிகள் சாகுபடி நடைபெற்று வருகிறது. ஆனாலும் பணப்பயிர்கள் எனப்படும் பழப்பயிர்கள் சாகுபடியில் ஒரு சில விவசாயிகளே ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் உடுமலை பகுதியில் ஒரு சில விவசாயிகள் சாத்துக்குடி சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது : சாத்துக்குடி சாகுபடிக்கு தண்ணீர் தேங்காத நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் பாங்கான நிலம் சிறந்ததாக இருக்கும். நமது பகுதியின் தட்பவெப்ப நிலை சாத்துக்குடி சாகுபடிக்கு உகந்ததாகவே உள்ளது. சாத்துக்குடி சாகுபடியை பொறுத்தவரை பராமரிப்பு குறைவான பயிர் என்று சொல்லலாம். சாத்துக்குடி நாற்று நடவு செய்து 3 ஆண்டுகளில் பூக்கத்தொடங்கும். அதிலிருந்து 7வது மாதத்தில் அறுவடை செய்யத் தொடங்கலாம்.

குளிர்பிரதேசங்களில் விளையும் சாத்துக்குடியை விட நமது பகுதியில் விளையும் சாத்துக்குடி சுவை மிகுந்ததாகவும் சாறு அதிகம் உள்ளதாகவும் உள்ளது. மேலும் ஒரு ஏக்கருக்கு 15 முதல் 20 டன் வரை மகசூல் கொடுக்கும். வழக்கமான முறையில் நெல், கரும்பு, காய்கறிகள் என்று சாகுபடி செய்யும்போது சந்தைப்போட்டிகளை அதிகம் சந்திக்க வேண்டியதிருக்கும். ஆனால் இதுபோன்ற புதிய வகைப்பயிர்களை சாகுபடி செய்யும் போது உள்ளூரிலேயே பெருமளவு விளைச்சலை விற்பனை செய்துவிட முடிகிறது என்றனர்.




தற்போதைய செய்திகள்