நுண்ணூட்டச்சத்து குறைபாடுகள் பருத்தி பயிரின் வளர்ச்சிக்கு பேரூட்டச் சத்துக்களான தழை, மண் மற்றும் சாம்பல் சத்துக்கள் மட்டுமல்லாமல் மற்ற நுண்ணூட்டச் சத்துகளும் பெரிதும் உதவுகின்றன. பருத்தியில் இயற்கையாக இருக்கக் கூடிய வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் செயற்கையாக அளிக்கப்படும் வளர்ச்சி ஊக்கிகளும் இணைந்து பருத்தியில் ஏற்படும் வினையியல் குறைபாடுகளை நிவர்த்தி செய்து பருத்தியின் வளர்ச்சிக்கும் மகசூல் அதிகரிப்பிற்கும் துணைபுரிகின்றன.
மக்னீசியம் குறைபாடு
அறிகுறிகள்
சுண்ணாம்புச் சத்து அதிகமுள்ள நிலங்களில் மக்னீசியம் குறைபாடு அதிகமாக காணப்படும். மேலும் மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து உரங்களை அதிகமாக இடுவதாலும் இக்குறைபாடு ஏற்படுகிறது. ஆரம்ப நிலையில் முதலாவது மேல் இலையில் அறிகுறிகள் தென்படும். இலைகள் முதிர்ச்சி அடையாமலே காய்ந்து உதிர்ந்து விடும். இக்குறைபாடு முதிர்ச்சியுற்ற நிலையில் இலைகள் சிவப்பாக மாறி மேல் நோக்கி வளைந்து கிண்ணம் போன்று குவிந்து காணப்படும். அடி இலைகள் ஊதா கலந்த சிவப்பு நிறமாகவும், இலை நரம்புகள் பச்சையாகவும் தெளிவாகவும் காணப்படும். இலை நரம்புகளுக்கு இடையே உள்ள இலைப் பரப்பானது வெளிரிய நிறமாக காணப்படும்.
மேலாண்மை
மக்னீசியம் சத்து குறைபாடு அதிகமுள்ள நிலங்களில் விதைப்பிற்கு முன்பாக ஏக்கருக்கு 12 கிலோ மக்னீசியம் சல்பேட்டை அடியுரமாக இடவேண்டும். காய்கள் உருவாகும் தருணத்தில் மக்னீசியம் குறைபாட்டின் அறிகுறிகள் தென்பட்டால் இலை வழி தெளிப்பாக 2 சதம் மக்னீசியம் சல்பேட் கரைசலை தெளிக்க வேண்டும். அதாவது 1 லிட்டர் தண்ணீரில் 20 கிராம் மக்னீசியம் சல்பேட் மற்றும் 10 கிராம் யூரியா கலந்து 50வது மற்றும் 65வது நாட்களில் தெளிக்க வேண்டும் அல்லது அறிகுறிகள் மறையும் வரை 13 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.
துத்தநாக குறைபாடு
அறிகுறிகள்
சுண்ணாம்புச் சத்து மிகுந்த அதிக களிமண் கலந்த நிலங்களில் இந்த குறைபாடு அதிகம் காணப்படும். பருத்தி விதைத்த 20 நாட்களுக்குப்பின் இந்த அறிகுறிகள் காணப்படும். இளஞ்செடிகளில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும். இலைகள் மிகவும் சிறுத்து, தடித்து விரைப்பாக இலை நரம்பு அமைவிற்கிடையில் பச்சையமற்று மஞ்சளாகவும் பழுப்பாகவும் காணப்படும். பாதிக்கப்பட்ட இலைகள் பழுப்பு நிறமடைந்து உலர்ந்து மேல்நோக்கி குவிந்து காணப்படும். இலைகள் செம்மை நிறப் புள்ளிகளுடன் துருபிடித்தது போல தென்படும். இலைகளில் பச்சை நிறம் மறைந்து பொன்னிறமாக மாறி காய்ந்து சருகு போலாகி விடும். இலைகள் மற்றும் இடைவெளிக் கணுக்கள் வளர்ச்சியடையாமல் செடிகள் வளர்ச்சி குன்றி சிறுத்து குட்டைத் தன்மையுடன் காணப்படும். காய் பிடிப்பதற்கு முன்பே பூக்கள் உதிர்ந்து விடும். நுனிக்கிளைகளில் சிறிய இலைகள் கொத்தாக இருக்கும் மேலும் அடிப்பாகத்தில் இலைகள் இருக்காது.
மேலாண்மை
பருத்தி விதைப்பதற்கு முன்பாக ஏக்கருக்கு 10 கிலோ துத்தநாக சல்பேட்டினை அடியுரமாக இடவேண்டும். இலைவழித் தெளிப்பாக 2 கிலோ துத்தநாக சபேட் மற்றும் 1 கிலோ சுட்ட சுண்ணாம்பினை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து 70 மற்றும் 80வது நாட்களில் தெளிக்க வேண்டும் அல்லது 5 கிராம் துத்தநாக சல்பேட்டை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரை தெளிக்க வேண்டும்.
போரான் குறைபாடு
அறிகுறிகள்
போரான் குறைபாட்டின் அறிகுறிகள் செடிகளின் நுனிபாகத்தில் தோன்றி நுனி மொட்டின் வளர்ச்சி தடைபடும். பூக்கள் நன்கு வளர்ச்சியடையாமல் சிறிய இதழ்களுடன் உட்புறம் மடிந்து காணப்படும். காம்பு ஒழுங்கற்ற முறையில் தடித்து இருக்கும். குறுகிய தடிமன் கொண்ட கிளைகள் அதிகமாக காணப்படும். பூக்கள் மற்றும் காய்களின் வளர்ச்சி தடைபட்டு பூக்களும் காய்களும் அதிக அளவில் உதிர்ந்து விடும். செடியின் நுனியில் கிளைகள் அதிகரித்து அடர்த்தியாக தோன்றும்.
மேலாண்மை
போரான் சத்து குறைபாட்டினை நிவர்த்தி செய்ய 0.1 சதம் போரிக் அமிலத்தை அதாவது 1 மி.லி போரிக் அமிலத்தை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து பூக்கும் பருவத்தில் இலை வழித் தெளிப்பாக 75வது மற்றும் 90வது நாட்களில் தெளிக்கலாம். இதனால் பூ, பிஞ்சு மற்ரும் காய்கள் உதிர்வது தடுக்கப்படுகிறது. 3 கிராம் போராக்ஸை 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து தழை பிடிக்கும், பூக்கும் மற்றும் காய்பிடிக்கும் பருவங்களில் இலை வழியாக அறிகுறிகள் மறையும் வரை தெளிக்க வேண்டும்.
மாங்கனிசு குறைபாடு
அறிகுறிகள்
அதிக அமிலத் தன்மை கொண்ட நிலங்களில் மாங்கனிசு பற்றாக்குறை அதிகம் காணப்படும். இக்குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்ட செடிகளில் மேல் பகுதியில் புதிதாக தோன்றிய இலைகள் இளஞ்சிவப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படும்.
மேலாண்மை
மாங்கனிசு குறைபாட்டினை நிவர்த்தி செய்ய 0.3 சத மாங்கனிசு சல்பேட் கரைசலை (1 லிட்டர் தண்ணீரில் 3 கிராம் மாங்கனிசு சல்பேட்டை) இலைவழித் தெளிப்பாக தெளிக்க வேண்டும்.
கந்தக குறைபாடு
அறிகுறிகள்
கந்தக சத்து குறைபாடினால் பாதிக்கப்பட்ட செடிகளில் புதிதாக தோன்றிய இலைகள் பழுப்பு நிறமடைந்து சிறியதாகவும் பலமில்லாத மெல்லிய தண்டுகளுடன் காணப்படும். செடிகளின் கீழ்ப்புறமாக உள்ள இலைகள் அடர் பச்சை நிறத்துடன் காணப்படும்.
மேலாண்மை
இலைவழித் தெளிப்பாக 1 சதம் நனையும் கந்தக கரைசலை தெளிக்க வேண்டும். அதாவது 1 லிட்டர் தண்ணீரில் 10 கிராம் நனையும் கந்தகத்தை கரைத்து தெளிக்க வேண்டும்.
பருத்தி உற்பத்தியில் வளர்ச்சி ஊக்கிகளின் பங்கு
பூக்கும் பருவ காலத்தை தாமதப்படுத்துதல்
எத்தரல் வளர்ச்சி ஊக்கியினை பருத்தி விதைத்த 30-45 நாட்களில் தெளித்தால் ஊசிமுனை மொட்டுகளை உதிரச் செய்து இலை பருவ வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இதனால் பயிரினுடைய அமைப்பு மேன்மையடைந்து நிறைய பூக்கள் பூத்து, அதிக காய்கள் பிடித்து 20-30 சதம் வரை மகசூல் அதிகரிக்கும்.
பூ மற்றும் காய்கள் காய்தல்
இக்குறைபாடு சில பருத்தி இரகங்களில் மாறுபட்ட தட்பவெப்பநிலை நிலவும் போது உண்டாகிறது. இதற்கு முக்கிய காரணங்கள் காய்கள் தோன்றி வளரும்போது போதிய அங்ககப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் பயிரில் வளர்ச்சி ஊக்கிகள் குறைபாடு போன்றவையாகும்.
மேலாண்மை
கடைசி உழவிற்கு முன்பு ஏக்கருக்கு 5 டன் தொழு உரம் அல்லது மக்கிய தென்னை நார்க்கழிவு உரமிடவேண்டும். விதைத்த 45 மற்றும் 75வது நாட்களில் நாப்தலின் அசிடிக் அமிலத்தை 10 பி.பி.எம் அளவில் 10 லிட்டர் தண்ணீருக்கு 2.5 மி.லி. வீதம் கலந்து தெளிக்க வேண்டும்.
காய்களின் எண்ணிக்கை மற்றும் பருமனை அதிகரித்தல்
டிபா (டிரை அயாடோ வென்சாயிக் அமிலம்) பயிர் வள்ர்ச்சி ஊக்கியினை ஏக்கருக்கு 2 கிராம் என்ற அளவில் தெளித்தால் காய்களின் எண்ணிக்கை மற்றும் பருமன் அதிகரிக்கிறது.
பூக்கும் திறனை அதிகப்படுத்துதல்
ஜிபரலிக் அமிலம் வளர்ச்சி ஊக்கியை 100 பி.பி.எம் என்ற அளவில் தெளித்தால் பூக்கும் திறன் அதிகரித்து பூ, பிஞ்சு உதிர்வது தடுக்கப்படும். மேலும் காய் பிடிப்புத்திறன் அதிகமாகிறது. செடிகளின் உயரம் மற்றும் காய்களின் எண்ணிக்கையும் அதிகமாகின்றது. 1 சதம் டி.ஏ.பி கரைசலை 70, 80 மற்றும் 90வது நாட்களில் தெளிப்பதன் மூலம் அதிக பூக்கள் பூத்து, காய்கள், உதிர்வது தடுக்கப்பட்டு அதிக காய்கள் மற்றும் அதிக எடை கொண்ட காய்கள் கிடைக்கும்.
இலை பழுப்பதை தாமதப்படுத்துதல்
1 சதம் யூரியா மற்றும் 0.1 சதம் மெக்னீசியம் சல்பேட் உரக்கரைசலை பூக்கும் சமயத்தில் தெளித்தால் இலைகள் பழுத்து உதிர்வது தடுக்கப்பட்டு ஒளிச்சேர்க்கை அதிகமாகின்றது.
இலைப்பருவ வளர்ச்சியை கட்டுப்படுத்துதல்
ஏக்கருக்கு 10 கிராம் டைமீத்தைல் பைபெரிடினியம் குளோரைடு அல்லது சைக்கோசெல் 40 பி.பி.எம் வளர்ச்சி ஊக்கியை தெளித்து இலைப் பருவ வளர்ச்சியைக் கட்டுப்படுத்தலாம். பூக்கும் பருவத்தில் மாலிக் ஹைட்ரசைடு வளர்ச்சி ஊக்கியினை 500 பி.பி.எம். அளவில் தெளித்தால் நுனிமொட்டின் வளர்ச்சி கட்டுப்படுத்தப்பட்டு இலைகளின் திறன் 10-15 நாட்கள் நீடிக்கிறது.
ஆதாரம் : http://ta.vikaspedia.in/
