width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

கத்தரியில் காய்ப்புழு கட்டுப்படுத்துவது எப்படி?
 இராமநாதபுரம் மாவட்டத்தில் நைனார்கோவில் வட்டாரத்திற்கு உட்பட்ட பாண்டியூர், அக்கிரமேசி மற்றும் போகலூர் வட்டாரத்தில் மஞ்சக்கொல்லை, மெய்யனேந்தல் போன்ற பகுதிகளில் கத்தரியானது பரவலாக பயிரிடப்பட்டுள்ளது. கத்தரிக்காயானது மக்களால் விரும்பி உண்ணப்படும் காய்கறிகளில் மிகவும் முக்கியமானது.

அதேசமயத்தில் விவசாயிகளால் அதிக அளவு பூச்சி மருந்து தெளிக்கப்படும் பயிர்களில் கத்தரியும் ஒன்றாகும். கத்தரியில் காய்த்துளைப்பானானது 70 முதல் 92 விழுக்காடு சேதங்களை ஏற்படுத்தி விவசாயிகளுக்கு பெருமளவில் நஷ்டத்தைஏ ற்படுத்துகின்றது.

சேத அறிகுறிகள்

கத்தரி தண்டு மற்றும் காய்த்துளைப்பான் நடவு செய்த 15ம் நாள் முதல் கத்தரி பயிரினைத் தாக்க ஆரம்பித்து விடுகிறது. வெண்ணிறமான இளம் புழுக்களானது இளம் தண்டுகளை துளையிட்டு குடைந்து சென்று தண்டின் உட்பகுதிகளை உண்ணுகின்றன. இவ்வாறு தாக்கப்பட்ட தண்டுகள் மற்றும் குருத்துகள் வாடிக் காய்ந்து தொங்கி விடுகின்றன. இளம்புழுக்கள் தாக்கிய தண்டின் கணுக்களுக்கு அருகில் புழு குடைந்த துளை காணப்படும். மேலும், இப்புழுக்களானது பூ மொட்டுகள் மற்றும் காய்களையும் துளையிட்டு குடைந்து சென்று சேதங்களை ஏற்படுத்துகின்றன. தாக்கப்பட்ட கத்தரி பயிரின் தண்டு மற்றும் காயினைப் பிளந்து பார்த்தால் புழு குடைந்து உண்ட தண்டு மற்றும் காய்ப்பகுதியும் அதன் கழிவுகளும், இளம் சிவப்பு நிற புழு மற்றும் முதிர்ச்சியடைந்த புழுவும் உள்ளிருப்பது தெரியும். இதனால் சந்தையில் கத்தரிக்காயின் தரம் குறைவதோடு மட்டுமல்லாமல், காயின் விலையும் குறைந்து விவசாயிகளின் வருமானத்தைக் குறைக்கிறது.

சாதகமான சூழ்நிலை

மிதமான வெப்பநிலையைத் தொடா்ந்த மழைத்தூறல் மற்றும் வறண்ட வானிலை, அதிகரிக்கும் பகல் மற்றும் இரவு நேர வெப்பம், காலை நேர ஈரப்பதம் (>70%) போன்றவை இப்பூச்சிகளின் பெருக்கத்திற்கு சாதகமான காரணிகளாகும்.

வாழ்க்கைப் பருவம்
பெண் அந்துப்பூச்சியானது முட்டைகளை தனித்தனியாக பயிரின் வெவ்வேறு பாகங்களான தண்டுகள், இலைகள், பூக்கள் மற்றும் காய்களில் இட்டுச்செல்கின்றன. புழுக்களானது இளம் சிவப்பு நிறத்தைக் கொண்டிருக்கும். புழுவானது 10 முதல் 15 நாட்கள் வரை தண்டுகள் மற்றும் காய்களை சேதப்படுத்தி விட்டு பின்னர் கூட்டுப்புழுவாக மாறிவிடும். பழுப்பு நிறமான கூட்டுப்புழுக்கள் தண்டுகள் மற்றும் காய்களின் மீது ஒட்டிக் கொண்டிருக்கும். தாய் அந்துப்பூச்சியானது வெண்மை நிறமாக இருக்கும். அதனுடைய முன் இறக்கையில் பழுப்பு மற்றும் இளம் சிவப்பு நிற புள்ளிகள் காணப்படும்.

மேலாண்மை முறைகள்
கத்தரி காய்ப்புழுவினை முழுவதுமாக கட்டுப்படுத்துவது என்பது இயலாத காரியம். ஏனெனில் இவை தண்டு மற்றும் காய்ப்பகுதியின் உள்ளே இருந்து கொண்டு சேதத்தினை ஏற்படுத்துவதால் பூச் சிமருந்து தெளித்தாலும் இவற்றை முழுவதுமாக அழிக்க முடிவதில்லை. எனவே ஒருங்கிணைந்த பூச்சி நிர்வாகத்தினை கடைப்பிடித்தால் இப்பூச்சியின் தாக்குதலைக் குறைக்கலாம்.
ü தாக்கப்பட்ட தண்டுகளை துளைகளுக்கு கீழே புழுவுடன் சேர்த்து உடனுக்குடன் கிள்ளி எடுத்து விடவேண்டும். பின்னர் அவற்றை எரித்தோ அல்லது மண்ணில் புதைத்தோ விட வேண்டும்.
ü பாதிக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்து விட வேண்டும்.
ü வயல்களில் இனக்கவர்ச்சிப் பொறி (லூஸின்லுயூர்) எக்டேருக்கு 12 என்ற அளவில் அமைத்து ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம்.
ü தாவரப் பூச்சிக்கொல்லியான அசாடிராக்டின் (1 இசி) 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதக் கரைசலை 15 நாட்கள் இடைவெளியில் தெளித்து காய்த்துளைப்பானின் தாக்குதலைக் குறைக்கலாம்.
ü சேதம் அதிகமாகும் போது கீழ்கண்ட மருந்துகளில் ஏதாவது ஒன்றினை நடவு நட்ட ஒரு மாதத்திலிருந்து 15 நாட்கள் இடைவெளியில் கைத்தெளிப்பான் கொண்டு காலை அல்லது மாலை வேளைகளில் கைத்தெளிப்பான் கொண்டு செடி முழுவதும் நன்கு நனையும் படி தெளிக்கவேண்டும்.
எ எமாமெக்டின் பென்சோயேட் (5 எஸ்ஜீ) 0.4 கிராம்
எ புளுபென்டியமைடு (20 டபிள்யுடீஜீ) 0.75 கிராம்
எ தயோடிகார்ப் (75 டபிள்யுபி) 2.0கிராம்
எ குயினால்பாஸ் (25 இசி) 1.5 மிலி
எ போசலோன் (35 இசி) 1.5 மிலி


ஒரே மருந்தினை திரும்ப திரும்ப அடிக்காமல் மருந்துகளை சுழற்சி முறையில் அடிக்க வேண்டும்.

 copy from valartamilpublications
தற்போதைய செய்திகள்