width:1200px height:628px மேலாண்மை செய்திகள்

நிலக்கடலைச் சாகுபடியில் அதிக மகசூலுக்கு ஜிப்சம் இடவேண்டும்




புதுக்கோட்டை மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலக்கடலைப் பயிரில் ஜிப்சம் இட்டு மண் அணைப்பதனால் அதிக மகசூல் பெறலாம் எனப் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காரீப் பருவத்தில் நிலக்கடலைப் பயிர் 3501 எக்டரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலைப் பயிரில், விதைத்த 45ம் நாளில் இரண்டாம் களையெடுத்து மண் அணைக்க வேண்டும். இதனால் நிலக்கடலைப் பயிரின் விழுதுகள் மண்ணில் எளிதாக இறங்கும். மேலும் திரட்சியான எண்ணெய்ச் சத்து மிக்க காய்கள் பெறுவதற்குச் சுண்ணாம்புச்சத்தும் கந்தகச்சத்தும் தேவைப்படுகின்றன. சுண்ணாம்புச் சத்தும் கந்தகச் சத்தும் கொண்ட ஜிப்சத்தினை ஒரு ஏக்கருக்கு தேவையான 160 கிலோவினை கடைசி உழவின்போது ஒருமுறை 80 கிலோவும், 45ம் நாள் ஒருமுறை 80 கிலோவும் இட வேண்டும். மேலும், தற்பொழுது ஆனிப் பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்ட பயிருக்குக் களையெடுத்து ஜிப்சம் இட்டு மண் அணைக்கும் தருவாயில் உள்ளது. எனவே, விவசாயிகள் 45ம் நாள் நிலக்கடலைப் பயிருக்கு மண் அணைப்பதற்கு முன்னதாக ஏக்கருக்கு 80 கிலோ ஜிப்சம் இட்டு, களைகள் நீக்கி, செடிகளைச் சுற்றி நன்கு மண் அணைத்துவிட வேண்டும். இதனால் நிலக்கடலைப் பயிரின் விழுதுகள் எளிதாக மண்ணுக்குள் இறங்குவதனால் கடலையின் எண்ணிக்கை அதிகமாகும். மேலும், அறுவடையின்போது திரட்சியான மற்றும் எண்ணெய்ச்சத்து மிகுந்த நிலக்கடலை கிடைக்கும். இதனால் விவசாயிகளுக்கு அதிக மகசூலும் லாபமும் கிடைப்பதற்கு ஏதுவாகிறது. தேவையான ஜிப்சம் தனியார் உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

எனவே விவசாயிகள் நிலக்கடலை விதைத்த 45ம் நாள் ஜிப்சம் இட்டு மண் அணைத்து மகசூலை அதிகரித்து இலாபம் அடைந்திடுமாறும், கூடுதல் விவரங்களுக்குத் தங்கள் பகுதி வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தினை அணுகிப் பயன் பெறுமாறும் புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குநர் இராம.சிவகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.




தற்போதைய செய்திகள்