எள் பயிரானது எண்ணெய் வித்துப் பயிர்களில் மிகவும் முக்கியமான மற்றும் பாரம்பரியமான ஒன்றாகும். எள்ளானது எண்ணெய் வித்துப் பயிர்களின் அரிசி என்றழைக்கப்படுகிறது. இது தொடர் பயிருக்கும், கலப்பு பயிருக்கும் மற்றும் தனிப்பயிருக்கும் ஏற்றதாகும். எள்ளானது நிலத்தடியில் எஞ்சியுள்ள ஈரத்தன்மையை பயன்படுத்தி வறட்சியினைத் தாங்கி வளரக் கூடிய தன்மையுடையதாகும். மேலும் இதனுடைய வேரானது மண் அமைப்பினை மாற்றம் செய்வதனால் நீர் பிடிப்புத் தன்மையை அதிகரிக்கிறது.
தமிழ்நாட்டில் எள் பயிரானது சுமார் 0.74 லட்சம் எக்டரில் சாகுபடி செய்யப்பட்டு 0.32 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு எக்டரில் சராசரி மகசூல் 433 கிலோவாகும். உலக அளவில் நல்லெண்ணெயின் மருத்துவ குணங்களை அனைவரும் ஒப்புக்கொண்டிருக்கும் இவ்வேளையில் எள்ளுக்கு நிலவும் சந்தை வாய்ப்பினை பயன்படுத்தி எள் உற்பத்திக்கான உயர் விளைச்சல் தொழில்நுட்பங்களை கடைபிடிப்பதன் மூலம் எள் உற்பத்தியை அதிகரிக்கலாம்.
மண் வகை
மணற்பாங்கான வண்டல், செம்மண் மற்றும் களிமண் போன்ற மண் வகைகள் ஏற்றவை. நீர்தேங்கும் தன்மையுள்ள நிலங்கள் மற்றும் உவர் மண் நிலங்களுக்கு உகந்ததல்ல மண்ணின் சராசரி கார அமில நிலை 6 – 8.0க்குள் இருக்க வேண்டும்.
விதை நேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பன்டாசிம் இராசாயன பூஞ்சாணக்கொல்லி மருந்தினை கலந்து விதை நேர்த்தி செய்யலாம். பிறகு 24 மணி நேரம் கழித்து விதைப்பதற்கு முன்பு ஒரு ஏக்கருக்கு 1 பொட்டலம் அசோஸ்பைரில்லம் மற்றும் 1 பொட்டலம் பாஸ்போபேக்டீரியா உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியில் கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்கலாம். இவ்வாறு விதை நேர்த்தி செய்வதனால் விதை மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். மேலும் பரிந்துரைக்கப்படும் அளவில் 25 சதவீத தழைச்சத்தினைக் குறைக்கலாம்.
விதைக்கும் முறை
எள் விதை சிறியதாக இருப்பதால் ஒரு ஏக்கருக்கு தேவைப்படும் 2 கிலோ விதைகளை 8 கிலோ மணலுடன் கலந்து வரிசியில் நிலத்தின் மேற்பரப்பில் சீராக தூவி விதைக்க வேண்டும். 3 செ.மீ ஆழத்திற்கு மிகாமல் விதைத்து மண் கொண்டு மூட வேண்டும்.
களை நிர்வாகம்
எள் விதைத்த மூன்றாம் நாள் மண்ணில் ஈரம் இருக்கும் தருணத்தில் ஏக்கருக்கு 500 மி.லி அலாக்குளோர் (அ) 800 மி.லி பென்டிமெத்தலின் (அ) 800 மி.லி புளுக்குளோரலின் களைக் கொல்லி மருந்தை 200 லிட்டர் நீரில் கரைத்து கைத்தெளிப்பான் கொண்டு தெளித்தால் களைகளைப் பெருமளவு கட்டுப்படுத்தலாம். பிறகு 30 – 35 வது நாளில் ஒரு கைக்களை எடுப்பது அவசியம். களைக்கொல்லி இடாவிட்டால் விதைத்த 15 நாட்கள் கழித்து முதல் முறையும், 35 நாட்கள் கழித்து இரண்டாவது முறையும் கைக்களை எடுத்து களைகளைக் கட்டுப்படுத்தலாம்.
பயிர் ஊக்கி தெளித்தல்
எள் பயிரில் பூப்பிடிக்காமை பிரச்சனையை நிவர்த்தி செய்ய விதைத்த 40ம் நாள் ஏக்கருக்கு 150 மி.லி பிளானோபிக்ஸ் 40 பி.பி.எம். மற்றும் 1 சதம் டி.ஏ.பி கரைசலை கலந்து மாலை வேளைகளில் தெளிக்க வேண்டும். எள் விதைத்த 30ம் நாள் மற்றும் 50ம் நாள் ஏக்கருக்கு 20 கிராம் சாலிசிலிக் அமிலத்தை 200 லிட்டர் நீரில் கலந்து தெளிப்பதன் மூலம் 20 சதம் மகசூலை அதிகரிக்கலாம்.
அறுவடை
செடியின் அடி இலைகள் பழுத்து கொட்டிவிடும் மற்றும் செடியின் அடியிலிருந்து மேலாக உள்ள 10வது காயில் உள்ள விதைகள் கருப்பாக இருந்தால் அறுவடை செய்யலாம். அறுவடை செய்த செடியினை வட்ட வடிவில் அடுக்கி 3 நாட்களுக்கு பட்டரை போட வேண்டும். பின்பு செடியினை உலுக்கினால் 70 சதம் விதைகள் கொட்டிவிடும். பின்பு மீண்டும் 1 நாள் வட்ட வடிவமாக வைத்து மீண்டும் விதைகளை பிரித்தல் வேண்டும்.
