கால்நடை தீவனமாக புல்வகையை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு கூவாப்புல், வேலிப்புல் என பல பெயர் உள்ளது. விதை விதைத்த நான்காவது நாளில் செடி துளிர்த்துவிடும்.
விரைந்து வளரக்கூடிய இந்த புல் செடியை வெட்டி கால்நடைகளுக்கு தீவனமாக கொடுக்கலாம். பசுந்தீவனமான வேலிமசாலை சாகுபடி செய்யும் முறை பற்றி இங்கு காணலாம்...
பருவம் :
இறவையாக ஆண்டு முழுவதும் பயிரிடலாம்.
மானாவாரியில் ஜூன் - அக்டோபர் மாதங்களில் விதைக்கலாம்.
மண் :
எல்லா மண் வகைகளுக்கும் ஏற்றது.
நிலம் தயாரித்தல் :
இரும்புக்கலப்பை கொண்டு இரு முறையும், நாட்டுக்கலப்பை கொண்டு மூன்று அல்லது நான்கு முறையும் உழவேண்டும்.
கடைசி உழவில் தொழு உரம், மண்புழு உரம், காயவைத்து இடித்த வேப்பங்கொட்டை, வேப்பம் புண்ணாக்கு போன்றவற்றை இட்டு நிலத்தை நன்கு சீர்படுத்திக் கொள்ள வேண்டும்.
நிலத்தை நன்கு உழுது மண் கட்டிகள் இல்லாதவாறு செய்யவேண்டும். பின்பு பாத்திகளாக பிரித்து கொண்டு, அந்த பாத்திகளுக்கு வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.
6 மீ நீளம் மற்றும் 1 மீ இடைவெளியில் பார் பிடித்து பார்களுக்கிடையில் வாய்க்கால்களை அமைக்க வேண்டும்.
விதை நேர்த்தி :
விதைகளை வெந்நீரில் நான்கு நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.
மேலும் எளிய முறையாக பாத்திரத்தில் நீரை கொதிக்கவைத்து பின் 4 நிமிடம் ஆறவைத்து விதைகளை 3 - 4 நிமிடம் ஊறவைக்க வேண்டும்.
அடுத்து நீரை வடித்துவிட்டு குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும். விதைகளை 72 மணி நேரம் குளிர்ந்த நீரில் ஊறவைத்து விதைக்கலாம்.
நீர் மேலாண்மை :
பாசன பகுதிகளில் வளர்க்கப்படும் பயிர்களுக்கு நீர் மேலாண்மை செய்திட வேண்டும்.
வளர்ச்சியடைந்துவிட்டால் சில மாதங்களின் வறண்ட சு+ழ்நிலையையும் கூட தாக்குப்பிடித்துவிடும்.
இருந்த போதிலும் விரைவான வளர்ச்சிக்கு நிலத்தில் 5 முதல் 6 மாதங்கள் வரை ஈரம் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
