width:600px height:330px கால்நடை

கால்நடை தீவனம்




விவசாயத்தில் பயன்படுத்தப்படும் பல உபபொருட்களை கால்நடைகளுக்கு தீவனமாக அளிக்கலாம். அதனால் தீவன செலவை ஈடுகட்ட முடியும். இங்கு காண்போம்.

மரவள்ளி இலை : 

 மரவள்ளி இலையில் புரதம், சுண்ணாம்பு மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளன.

 பச்சை இலைகளை கால்நடைகளுக்கு அதிக அளவு தீவனமாக அளிக்கும்போது நச்சு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் உலர்த்திய இலைகளை தீவனமாக பயன்படுத்தலாம். உலர்த்திய இலைகளை கால்நடைகளுக்கு அளிப்பதால் நச்சு ஏற்படாது.

மரவள்ளி தோல்பட்டை :

 இதில் 3 விழுக்காடு புரதம் உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஈரத்தோலில் ஹைட்ரோ சயனிக் அமிலம் உள்ளதால், உலர்த்திய மரவள்ளித் தோலை மாடுகளுக்கு நாளொன்றுக்கு 3 முதல் 5 கிலோ வரை தீவனமாக அளிக்கலாம்.

மரவள்ளி திப்பி :

 இதில் 4 விழுக்காடு புரதம் மற்றும் 30 விழுக்காடு நார்பொருட்கள் அடங்கியுள்ளது. ஈர திப்பியை 3 முதல் 5 கிலோ வரை கால்நடைகளுக்கு அளிக்கலாம் அல்லது உலர்த்திய திப்பியை 30 விழுக்காடு வரை கலப்பு தீவனத்தில் கலந்து அளிக்கலாம்.

புளியங்கொட்டைத் தூள் :

 தோல் நீக்கிய புளியங்கொட்டைத் தூளில் 12 விழுக்காடு செரிமான புரதமும், 65 விழுக்காடு மொத்த சத்துக்களும் உள்ளது.

 இத்தூளை நாள் ஒன்றிற்கு 1.5 கிலோ வீதம் கால்நடைகளுக்கு அளிக்கலாம் அல்லது 30 விழுக்காடு வரை கலப்பு தீவனத்தில் கலந்து அளிக்கலாம்.

மாம்பழத்தோல் :

 இதில் சர்க்கரை மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. மாம்பழத் தோலில் அதிகமாக ஈரப்பதம் இருப்பதால் அதை மரவள்ளி திப்பி அல்லது தவிடுடன் 40 : 60 என்ற விகிதத்தில் கலந்து உலர வைத்து கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

மாங்கொட்டைத் தூள் :

 மாங்கொட்டைத் தூளில் 6 விழுக்காடு புரதம் மற்றும் 75 விழுக்காடு எரிசக்தி உள்ளது. அதில் டானிக் அமிலம் அதிகம் உள்ளதால் தீவனத்தில் அதிகளவு உபயோகிக்க கூடாது. இருப்பினும் கலப்பு தீவனத்தில் 10 விழுக்காடு வரை கலந்து அளிக்கலாம்.

கருவேல் காய் :

 இதில் 6 விழுக்காடு செரிமான புரதம் மற்றும் 60 விழுக்காடு மொத்த செரிமான சத்துக்கள் உள்ளது. எனவே இதை கலப்பு தீவனத்தில் 30 விழுக்காடு வரை சேர்க்கலாம். 

வாழை மர கிழங்கு : 

 இதில் 5 விழுக்காடு செரிமான புரதம் மற்றும் 70 விழுக்காடு எரிசக்தி உள்ளது. கால்நடைகளுக்கு நாளொன்றுக்கு 20 முதல் 50 கிலோ வரை தீவனமாக அளிக்கலாம். இதில் எரிசக்தி அதிகமாகவும், புரதம் குறைவாகவும் உள்ளது.

வேப்பம் புண்ணாக்கு :

 இதில் புரதம் அதிகம் உள்ளது. இருப்பினும் இதில் அதிக கசப்பு தன்மை உள்ளதால் கால்நடைகள் விரும்பி உண்ணுவதில்லை. எனவே கால்நடைகளின் அடர்தீவனத்தில் 20 விழுக்காடு வரை சேர்த்து அளிக்கலாம்.

 இனவிருத்திக்கு பயன்படுத்தப்படும் காளைகள் மற்றும் மாடுகளுக்கு வேம்பு சார்ந்த பொருட்களை அளிப்பதை தவிர்த்தல் நல்லது.




தற்போதைய செய்திகள்