width:728px height:486px கால்நடை

அமில நோயிலிருந்து கால்நடைகளை காப்போம்




பொங்கல் பண்டிகையின் போது மாடுகளுக்கு சர்க்கரை பொங்கலை அளவுக்கு மீறி கொடுத்தால் அமில நோயால் அவை பாதிக்கப்படலாம் என திண்டுக்கல் மாவட்ட கால்நடை பராமரிப்புதுறை முன்னாள் இணை இயக்குநர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி தெரிவித்துள்ளதாவது, உழவு தொழிலுக்கு உறுதுணையாக கால்நடைகள் இருந்து வருகின்றன. இதற்காக மாட்டுக்குப் பொங்கல் வைத்து, கரும்பு படைத்து விவசாயிகள் தங்கள் நன்றியினை தெரிவிக்கின்றார்கள். மாட்டு பொங்கலின் போது பொங்கல், பச்சரிசி, சாதம், கரும்பு மற்றும் பழங்களையும் சேர்த்து உண்ணக் கொடுப்பது வழக்கம். அவ்வாறு கொடுக்கும் போது சிலர் அளவுக்கு அதிகமாக கொடுத்து விடுகின்றனர். இப்படிக் கொடுப்பதால் மாடுகளுக்கு அமில நோய் ஏற்படும்.
அளவில் அதிகமாக இப்பொருட்கள் கால்நடைகள் உண்பதால் ரூமன் எனப்படும் வயிற்றில் பாக்டீரியா கிருமிகள் எண்ணிக்கை பெருகி காரத்தன்மை குறைந்து அமில நோய் ஏற்படும். இதனால் புளிப்பு ஏற்பட்டு லேக்டிக் அமிலம் ஏராளமாக சுரந்து ரத்தத்தின் தன்மையை மாற்றிவிடும். இதன் காரணமாக மாடுகள் தீவனம் சாப்பிடாது, உடல் நீரில் இழப்பும், வயிறு உப்புசமும் கண்டு கால்நடைகள் மிக மோசமான நிலையை அடையும். கால்நடைகள் நெல், அரிசி, அரிசிச்சோறு, கோதுமை, ஓட்டல்களின் கழிவு பதார்த்தங்கள், விருந்துகளில் மீதமாகும் எஞ்சிய உணவுகள் இவைகளை சாப்பிடும் போது அமில நோய் உண்டாகும்.
மேலும் அளவுக்கு அதிகமான இனிப்பு பண்டங்களை சாப்பிடும் போதும் வயிற்றில் கடுமையான உப்புசம் ஏற்பட்டு அவை இறக்க நேரிடும்.

கால்நடைகள் தாங்கள் வழக்கமாகச் சாப்பிடும் தீவனங்களுக்கே தங்களைப் பழக்கப்படுத்திக் கொள்பவை. தீவனத்தில் திடீர் மாறுதல் ஏற்படும் போது ஒவ்வாமை (அலர்ஜி) உண்டாகி கடுமையாக உடல் ஆரோக்கிய கேடுகளை விளைவிக்கின்றன. தீவனத்தில் திடீர் மாறுதல் செய்யும் போது அவற்றை சிறிது சிறதாக கொடுத்து பின்னர் அளவை அதிகரித்தால் தான் அந்த உணவு வகைகளுக்கு அவைகள் தம்மை தயார்படுத்திக் கொள்ளும்.

நோய் கண்ட மாடுகளுக்கு சோடா உப்பு 200 கிராம் கொடுக்கலாம். குளோர் டெட்ரா சைக்கிளின் மாத்திரைகள் தரலாம். நிலைமை மோசமாக இருந்தால் தாமதம் செய்யாது உடனே கால்நடை டாக்டரிடம் காட்ட வேண்டும்.

எனவே விவசாயிகள் பொங்கல் பண்டிகையின் போது தங்கள் கால்நடைகளுக்கு பொங்கல் போன்ற விசேஷ உணவு வகைகளை 200 கிராம் வரை கொடுக்கலாம். அளவான பொங்கல் கொடுத்து அமிலநோய் ஆபத்திலிருந்து பாதுகாக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.




தற்போதைய செய்திகள்