width:299px height:168px கால்நடை

ஆடுகளுக்கு குடற்புழு நீக்க பராமரிப்பு !!




ஆடு வளர்ப்பில் ஆடுகள் சரியான கால கட்டத்தில் போதிய அளவு எடையை அடைய வேண்டும். ஆனால், சில நேரங்களில் ஆடுகள் போதிய அளவு எடை அதிகரிக்காமல் மெலிந்து காணப்படும். இதற்குக் காரணம், ஆடுகளில் காணப்படும் குடற்புழுக்கள் தான். அதை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி பார்ப்போம்.

 பெரும்பாலான நிலைகளில் ஆடுகளை தாக்கும் குடற்புழுக்கள் பட்டிகளில் இருந்தும், மேய்ச்சல் நிலங்களில் இருந்தும் ஆடுகளுக்கு பரவுகின்றன. 

 ஆடுகளில் தட்டைப்புழுக்கள், நாடாப்புழுக்கள் மற்றும் உருண்டைப் புழுக்கள் என்று மூன்று வகையான குடற்புழுக்கள் உண்டாகின்றன. 

 இவை ஆடுகளின் குடலில் ஒட்டுண்ணிகளாக தங்கி ரத்தத்தையும், சத்துகளையும் உறிஞ்சி வாழும். ஆடுகளின் சாணம் வழியாக வெளிவரும். இந்த குடற்புழுக்களின் முட்டைகள் மேய்ச்சல் நிலங்களில் விழுந்து காணப்படும். 

 மற்றொரு ஆடு இந்த இடத்தில் வந்து மேயும் போது அதன் உடலுக்குள் சென்று விடும். இந்த குடற்புழுக்கள் ஆடுகளின் குடலுக்கு செல்வதால் ஆடுகள் வளர்ச்சி குன்றி பாதிக்கப்படும். சில நேரங்களில் இறப்பும் நேரலாம். 

ஆட்டுப்பட்டி பராமரிப்பு :

 ஆடுகளை வளர்க்கும் பட்டி என்பது ஒவ்வொரு ஆட்டுக்கும் போதிய அளவு இடவசதியை கொண்டிருக்க வேண்டும். 

 தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டிகள் சரியான இடத்தில் சரியான அளவுகளுடன் அமைத்தல் வேண்டும். 

 அதிக ஆடுகளை பட்டியில் அடைக்கும் போது இட நெருக்கடியால் ஆடுகள் இடும் சாணம், தீவனம் அல்லது தண்ணீரில் விழ வாய்ப்பு உண்டு. 

 இந்த சாணத்தில் குடற்புழுக்களின் முட்டை இருக்கும். இந்த தீவனத்தை ஆடுகள் உண்ணும் போது குடற்புழு முட்டைகள் ஆடுகளின் உடலுக்கு செல்லும். 

 எனவே, ஆடுகள் வளர்ப்பு பட்டியில் சாணத்தை உடனுக்குடன் அப்புறப்படுத்தி பட்டியை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்க வேண்டும். 

 பட்டியில் நல்ல காற்றோட்டம் மற்றும் சு+ரிய வெளிச்சம் படுமாறு வைத்திருந்தால் அங்கு காணப்படும் குடற்புழுக்களின் முட்டைகள் எளிதில் காய்ந்து அழிந்துவிடும்.

மேய்ச்சல் நிலப் பராமரிப்பு :

 அதிக எண்ணிக்கையிலான ஆடுகளை சிறிய அளவிலான மேய்ச்சல் நிலங்களில் மேய விடக்கூடாது.

 மேய்ச்சல் நிலங்களில் அடர்த்தியாக வளர்ந்து காணப்படும் புற்களில் ஆடுகளை மேய விடக்கூடாது. இந்த புற்களை வெட்டி தீவனமாக அளிப்பது நல்லது.

குடற்புழு நீக்கம் :

 பண்ணையில் ஒரு ஆடு குடற்புழுவால் பாதிக்கப்பட்டு நோயுற்றால் மற்ற ஆடுகளுக்கும் பாதிப்பு இருக்கும். ஆனால், வெளியில் தெரியாது. 

 அவற்றின் குடலிலும் புழுக்கள் பெருகிய பிறகு நோயால் பாதிக்கப்படும். எனவே, அனைத்து ஆடுகளுக்கும் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு முறை குடற்புழு நீக்க மருந்தை அளிக்க வேண்டும்.

 ஆடுகளில் திடீர் எடை குறைவு காணப்பட்டால் குடற்புழு மருந்துகளை அளிக்க வேண்டும். குடற்புழு நீக்கம் செய்த ஆடுகளை ஒரு நாள் மேய்ச்சலுக்கு அனுப்பாமல் பட்டியிலேயே அடைத்து தீவனம் அளிக்க வேண்டும்.




தற்போதைய செய்திகள்