வான்கோழிகள் இறைச்சிக்காகவே அதிக அளவில் வளர்க்கப்படுகின்றன. இவற்றின் இறைச்சி மிருதுவாகவும், சுவை மிகுந்ததாகவும் இருக்கும். வான்கோழிகளின் எடை மற்ற கோழிகளை விட கூடுதலாக இருப்பதாலும், அவற்றின் இறைச்சிக்கு நல்ல விலை கிடைப்பதாலும் வான்கோழிகளை வளர்ப்பதை பெரும்பாலானவர்கள் விரும்புகின்றனர்.
குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் வான்கோழிகளை அதிகமாக வளர்த்து வருகின்றனர். வான்கோழிகள் ஹhலந்து வெள்ளை, பார்பான் சிவப்பு, பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை உள்ளிட்ட 7 ரகங்களில் கிடைக்கிறது. இவை மற்ற கோழிகளை காட்டிலும் மிக விரைவாக வளர்ச்சியடையும். அதேபோல் தீவனமும் குறைந்த அளவில் சாப்பிட்டு எடை அதிகரிக்கும்.
அத்துடன் ஒரு வான்கோழி ஒவ்வொரு மாதமும் 10 முதல் 12 முட்டைகள் வரை இடும். இதனை வீட்டின் புறக்கடைகளிலும் வளர்க்கலாம். பண்ணை முறையிலும் வளர்க்கலாம். புறக்கடை முறையை பொறுத்தவரை வீட்டருகே உள்ள தோட்டத்தில் அல்லது வயல்வெளியில் வான்கோழிகளை மேயவிட்டு வளர்க்கலாம்.
பின்னர் இரவில் மட்டும் கொட்டகையில் அல்லது கூண்டுக்குள் அடைத்து வைக்கலாம். வீடுகளில் இருக்கும் தானியங்கள், சமையல் அறை கழிவுகள், எஞ்சிய உணவுகள் போன்றவற்றை வான்கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம். மேலும் தோட்டங்களில் பயிரிடப்படும் கீரைகள், களைகள் ஆகியவற்றை வான்கோழிகள் சாப்பிடும். வயல்வெளிகளுக்கு வரும் பு+ச்சிகள் மற்றும் வண்டுகளை உணவாக்கிக்கொள்ளும்.
இனப்பெருக்கம்
வான்கோழி இனப்பெருக்க நடவடிக்கையில் ஈடுபடும் போது ஆண், பெண் கோழிகளை தேர்வு செய்வதில் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் ஆண் கோழிகள் வேகமாக வளரக்கூடியதாகவும், அகன்ற மார்புடனும் இருக்க வேண்டும். அவற்றின் இறகுகள் வேகமாக வளரும் தன்மை கொண்டதாகவும், வால் இறகுகள் நீளமாகவும் இருப்பதுடன், தோகை விரித்து ஆடும் வயதில் இருக்க வேண்டும்.
இதேபோல் பெண் வான்கோழிகள் 12 வார வயது இருக்க வேண்டும். அத்துடன் 2 முதல் 2.5 கிலோ எடை இருக்க வேண்டும். மேலும் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து முட்டையிடும் திறன் பெற்றிருக்க வேண்டும். அடைகாக்கும் தன்மையில்லாமலும், வேகமாக வளரும் திறன் கொண்டதாகவும் உள்ள வான்கோழிகளையே இனப்பெருக்கத்துக்காக தேர்வு செய்ய வேண்டும்.
குஞ்சுகள் பராமரிப்பு
கோழிகள் மூலம் குஞ்சுகள் பொரித்திருந்தால் தாய் கோழிகளே குஞ்சுகளுக்கு தீவனத்தை உண்ண கற்றுக்கொடுக்கும். எந்திரங்களின் மூலம் குஞ்சுகள் பொரிக்கும் போது குஞ்சுகளை அடைக்காப்பான் அமைத்து பராமரிக்க வேண்டும். அடைக்காப்பானை ஆங்கிலத்தில் புரூடர் என்று அழைக்கிறோம்.
இளம் குஞ்சுகள் பொரிக்கப்பட்டத்தில் இருந்து 3 வார வயது வரை அதன் உடல் வெப்பத்தை சீராக பராமரிக்க, 100 வோல்ட் திறன் கொண்ட விளக்குகள் பொருத்தப்பட்ட பெட்டிக்குள் குஞ்சுகளை வைக்க வேண்டும். அதேபோல் ஒரு நாளைக்கு 5 அல்லது 6 முறை சிறிது சிறிதாக தீவனம் அளிக்க வேண்டும்.
தீவனம்
ஊட்டச்சத்து மிகுந்த தீவனத்தையே கொடுக்க வேண்டும். குஞ்சு பொரித்த நாளில் இருந்து 3 வார வயது வரை புரதச்சத்து 28 சதவீதமும், எரிசக்தி 2800 கிலோ கலோரியும் (1 கிலோவுக்கு) அடங்கிய தீவனம் அளிக்க வேண்டும். பின்னர் 4 முதல் 8 வாரங்களுக்கு 26 சதவீதம் புரதச்சத்து, 2900 கிலோ கலோரி எரிசக்தி இருக்கும்படி உணவு கொடுக்க வேண்டும்.
8 முதல் 14 வார வயதுடைய வான்கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் 25 சதவீதம் புரதச்சத்து, 3 ஆயிரம் கிலோ கலோரி எரிசக்தி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மேற்கண்டவாறு பராமரிப்பு, இனப்பெருக்க முறையை பின்பற்றினால் வான்கோழிகள் வளர்ப்பில் ஈடுபடுபவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.
