width:600px height:415px கால்நடை

குளிர்காலத்தில் ஆடுகளை தாக்கும் ரத்தக்கழிச்சல் நோய்...!




குளிர்காலத்தில் ஆடுகள் ரத்தக்கழிச்சல் நோயால் பாதிக்கப்படுகின்றன. இந்த நோயின் பாதிப்பால் ஒரு மாதம் முதல் 6 மாத வயதுள்ள இளம் குட்டிகள் கடுமையாக பாதிக்கப்படும்.

 ஆடுகளை எய்மெரியா என்ற ஒட்டுண்ணி பாதிக்கும் போது ரத்தக்கழிச்சல் நோய் ஏற்படுகிறது. 

 இந்தக் கிருமிகள் குளிர்காலத்திலும், மழைக்காலத்திலும் அதிக அளவில் காணப்படுகிறது.

 குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் இவை வேகமாகப் பரவுகின்றன. இந்தக் கிருமிகள் காணப்படும் இடத்தில் ஆடுகள் மேயும் போது இவை ஆடுகளை தொற்றுகின்றன.

 அவை ஆடுகளின் குடல் பகுதியை அடைந்து சிறுகுடலின் பின்பகுதி மற்றும் பெருங்குடல் உட்சவ்வுகளில் புண்களை உண்டாக்குகின்றன.

 ஆடுகளின் குடல் பகுதியில் புண் உருவாகும் போது குடலில் வீக்கமும், ரத்தக்கசிவும் ஏற்பட்டு ரத்தக் கழிச்சலை உண்டாக்குகிறது.

நோய்க்கான காரணங்கள் :

 அதிக எண்ணிக்கையிலான ஆடுகளை சிறிய இடத்தில் நெருக்கமாக அடைத்து வளர்த்தல், கொட்டில்கள் சுத்தமின்றி இருப்பது, தீவனம் மற்றும் குடிநீர் ஆகியவை சாணத்தால் மாசுபட்டிருக்கும் போது ரத்தக்கழிச்சல் கிருமிகள் ஆடுகளை எளிதாக தாக்குகின்றன.

 இந்த நோய் பாதிக்கப்பட்ட தாய் ஆடுகளுடன் வளர்க்கப்படும் குட்டிகளையும், தீவனப் பற்றாக்குறை மற்றும் பிற நோய் பாதிப்புகளால் பலவீனமாக காணப்படும் ஆடுகளையும் இந்த நோய் எளிதில் தாக்கும்.

நோய்க்கான அறிகுறிகள் :

 நோய் பாதித்த ஆடுகளில் திடீர் கழிச்சல் காணப்படும். கழிச்சலானது, கருப்பு நிறத்தில் சளியும், ரத்தமும் கலந்து துர்நாற்றத்துடன் இருக்கும். ரத்தப்போக்கு இருப்பதால் ஆடுகளில் ரத்தச்சோகை ஏற்பட்டு கண் மற்றும் வாய்ப்பகுதிகள் வெளிறிக் காணப்படும்.

 ஆடுகள் மேயாமல் சோர்ந்து காணப்படும். 

 மூச்சு விட சிரமப்படுவதுடன் உடல் மெலிந்து, வலுவிழந்து, எழ முடியாமல் இருக்கும்.

சிகிச்சை முறைகள் :

 இந்த நோயால் பாதிக்கப்பட்ட ஆடுகளை அறிகுறிகள் தென்பட்ட உடனேயே மற்ற ஆடுகளில் இருந்து தனியே பிரித்து விட வேண்டும். மேலும் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய மருந்துகளை அளிக்க வேண்டும்.

தடுப்பு முறைகள் :

 கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்கும் பொழுது ஆடுகளுக்கு போதிய இடவசதி அளித்து வளர்க்க வேண்டும். 

 குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் ஆடுகளை அடைத்து வைக்கக்கூடாது.

 குட்டிகளுக்கு பயன்படுத்தப்படும் படுக்கைப் பொருட்களை அன்றாடம் அகற்றி கொட்டகையை தினந்தோறும் சுத்தப்படுத்த வேண்டும். 

 தீவனம் மற்றும் தண்ணீர் தொட்டிகளை தரையில் இருந்து உயர்த்தி சாணத்தினால் மாசுபடாமல் வைத்து ஆடுகளுக்கு சுத்தமான தீவனம் மற்றும் தண்ணீர் வழங்க வேண்டும். 

 மழை மற்றும் குளிர்காலங்களில் கால்நடை மருத்துவர் ஆலோசனையின்படி தடுப்பு மருந்துகளை ஆடுகளுக்கு தீவனத்திலோ அல்லது தண்ணீரிலோ கலந்து அளிக்கலாம்.




தற்போதைய செய்திகள்