width:px height:px கால்நடை

சீமை வாத்து வளர்ப்பு !!




பொதுவாக விவசாயிகள் மட்டுமின்றி அனைவரும் கால்நடை வளர்ப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். தற்போது கூஸ் வாத்து எனப்படும் சீமை வாத்தும் எல்லோராலும் வளர்க்கப்படுகிறது.

எனவே விவசாயிகள் மட்டுமில்லாமல், கொஞ்சம் இடவசதி உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த வாத்துகளை வளர்த்தால் அதன் மூலம் நல்ல லாபம் பெறலாம். அத்தகைய சீமை வாத்து வளர்ப்பு முறை பற்றி இங்கு பார்ப்போம்.

சீமை வாத்துகள் :

இந்த வாத்துகள் கூஸ்வாத்து, பங்களாவாத்து என்றும் அழைக்கப்படும். இவை ஒன்பது மாத வயதில் 7 முதல் 9 கிலோ வரை உடல் எடையுடன் இருக்;கும்.

சீமை வாத்துக்களின் நிறத்தைக் கொண்டும், உடல் எடையைக் கொண்டும் அவை பல இரகங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. சீமை வாத்துக்களில் எம்டென், டௌலௌஸ், பில்கிரிம், பஃப், சைனீஸ், ஆப்ரிகன் போன்று பல இனங்கள் உள்ளன.

அவற்றில் எம்டென் மற்றும் ட்வ்லுஸ் என்ற இனங்கள் கலப்பினமாக கருதப்படுகின்றன. இந்த வகை சீமை வாத்துகள் முட்டையிடும் பருவகாலத்தில் 30-40 முட்டைகளும், ஒரு ஆண்டு காலத்தில் 80-120 முட்டைகளும் இடும் திறன் பெற்றது. 

மேலும் வாத்துகள் கோழிகளை போல் அல்லாமல், 2-3 வருடங்களுக்கு முட்டையிடும். சீமை வாத்து தன் முட்டைகளைத் தானே அடைகாத்து குஞ்சு பொரிக்கும் திறன் கொண்டது.

வளர்க்கும் முறைகள் :

சீமை வாத்துக்கள் வளர்ப்பிற்கு போதுமான அளவு நீர்நிலைகளுடன் கூடிய மேய்ச்சல் நிலம் இருக்க வேண்டும். அதிக குளிர், வெப்பம் மற்றும் காற்றிலிருந்து பாதுகாக்க அதிக செலவில்லாமல் கொட்டகை அமைக்க வேண்டும். 

மேலும் இதனை வளர்க்க தனி கொட்டகை தேவையில்லை. பண்ணை வீடுகளில் உள்ள அறைகளில் கூட வளர்க்கலாம். முதல் மூன்று வார வயதுடைய வாத்துக்களை 200 முதல் 300 வரை ஒரே இடத்தில் வளர்க்கலாம்.

இந்த வாத்துக்களை முதல் வாரத்தில் 90 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் தரக்கூடிய இன்ப்ராரெட் பல்புகளின் கீழ் வளர்க்க வேண்டும். 

வாரத்திற்கு 5 டிகிரி பாரான்ஹீட் வீதம் வெப்பத்தைக் குறைத்து மூன்றாவது வாரத்தில் இன்ப்ராரெட் பல்புகளை நீக்கி விட்டு சாதாரண பல்புகளை மாற்றி இரவில் வெளிச்சத்திற்கு மட்டும் பயன்படுத்தலாம்.

மேலும் ஆழ்கூளை முறையில் வளர்க்கும்போது ஒரு மூலையில் அரை அடி உயர தொட்டி கட்டி, அதன் மீது தண்ணீர் பாத்திரத்தை வைக்க வேண்டும்.

கீழே சிந்தும் நீர் வெளியே செல்வதற்கு வழி செய்ய வேண்டும். ஆழ்கூளை முறையில் வாத்துக்களை வளர்க்கும்போது அந்த இடத்தை சுத்தமாக வைக்க வேண்டும். 

தீவனம் :

சீமை வாத்துகளுக்கு தாராளமாக தண்ணீர் வழங்க வேண்டும். மேலும் சீமை வாத்துகளின் முக்கிய உணவு என எடுத்துக்கொண்டால், அது புரதச்சத்து நிறைந்த பசுந்தீவனமாகும். 

ஒரு சீமை வாத்திற்கு நாள் ஒன்றுக்கு புல்வகை பசுந்தீவனம் 300 கிராம், அடர்தீவனம் 100 கிராம், கிளிஞ்சல் 5 கிராம் போன்றவைகள் தேவைப்;படும். தீவனத்துடன் வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கலவையையும் சேர்த்து அளிக்க வேண்டும். 

மேலும் 4 வாரங்கள் ஆன சீமை வாத்துகளுக்கு மேய்ச்சலுடன் வாத்து ஒன்றுக்கு, ஒரு நாளைக்கு 100 கிராம் அடர் தீவனம் கொடுத்தால் போதும்.

கலப்பு தீவனங்களில் கடலைப் புண்ணாக்கையும், ஈரமான மக்கிய தானியங்களையும் கொடுக்கக்கூடாது. மேலும் கடலைப் புண்ணாக்கிற்கு பதிலாக சூரியகாந்தி புண்ணாக்கை வழங்கலாம்.

(குறிப்பு : கலப்பு தீவனம் அல்லது அடர் தீவனம் என்பது மக்காச்சோளம், கம்பு, ராகி, அரிசி, புண்ணாக்கு, தவிடு, தாது உப்புகள் மற்றும் சமையல் உப்பு ஆகியவை கலந்து தயாரிக்கப்படுவது.

கிலோ கலப்பு தீவனம் தயாரிக்க, 4 கிலோ தானியங்கள், 3 கிலோ புண்ணாக்கு, 2.75 கிலோ தவிடு, 200 கிராம் தாது உப்பு கலவை மற்றும் 50 கிராம் சமையல் உப்பு ஆகியவற்றை சேர்த்து, பொடியாக அரைக்க வேண்டும்.)

அடர்தீவனத்தை எப்போதும் தண்ணீரில் பிசைந்து கொடுக்க வேண்டும்.
 


நோய் பராமரிப்பு முறை :

 

சீமை வாத்துகளை ராணிக்கெட் எனப்படும் நோய் தாக்குகிறது. பாதிக்கப்பட்ட வாத்துகளில் பச்சை மற்றும் வெள்ளை நிறக் கழிச்சல் காணப்பட்ட பின் இறந்துவிடும்.

மேலும் பெண் வாத்துகளின் முட்டை உற்பத்தி குறைந்து காணப்படும். இந்நோயினைத் தடுக்க 7 மற்றும் 21-ம் நாட்களில் தடுப்பூசி போடவேண்டும்.

கூஸ் வாத்துக்குஞ்சுகள் வைட்டமின் மற்றும் தாது உப்புக்களின் பற்றாக்குறையால் நோய்கள் அதிகமாக ஏற்படும்.

எனவே வாத்துக்குஞ்சுகளுக்கு தாது உப்புக்கலவை மற்றும் வைட்டமின்களால் செறிவூட்டப்பட்ட தீவனத்தினை அதிக அளவில் அளிக்க வேண்டும்.

இந்த வாத்துகள் விளைநிலங்களில் உள்ள களைகளை அழிக்கக்கூடியது. எனவே பருத்தி, இஞ்சி, சோயா, வெங்காயம், தக்காளி, உருளை போன்ற விளைநிலங்களிலும், நர்சரிகளிலும் வளர்க்கும் போது இவை சிறந்த களை நீக்கியாக செயல்படும்.

மேலும் வாத்துகளின் கால்களை பிடித்து தூக்கும்போது அவற்றால் நமக்கு சிராய்ப்பு ஏற்படும். அதேபோல் இறக்கையை பிடித்து தூக்கும்போது அவை நம்மை அடித்து விடும் என்பதால் அவற்றை ஒரு கையால் கழுத்தையும் மறு கையால் உடலையும் பிடித்து தூக்க வேண்டும்.




Site For Sale Contact : 9894832938